ஹிஜாப் விவகாரம்: திங்களன்று திட்டமிட்டவாறு பள்ளிகள் திறக்கப்படுமா?

By காமதேனு

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் தொடரும் பதட்டத்தால், நீதிமன்ற உத்தரவுப்படி திங்களன்று பள்ளிகளை திறக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும் மாநில அரசு கவலை கொண்டுள்ளது.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி போன்ற மத அடையாளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் திங்களன்று(பிப்.14) கல்வி நிலையங்களை திறக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், அவசியமான இடங்களில் ஊரடங்கும் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால், ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் தலையீடு காரணமாக, மாநிலத்தில் பதட்டம் சூழ்ந்து வருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு என மாநிலத்தின் நகரங்களில் ஆங்காங்கே அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் முக்கிய இடங்களில் அவர்களின் அணிவகுப்புகளும் நடைபெற்றன. பிரச்சினைக்குரிய கல்வி நிலைய வளாகங்களை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே தற்போதைய பதட்ட நிலைமையை கருத்தில்கொண்டு கல்லூரிகளுக்கான விடுமுறையை பிப்.16 வரை நீட்டிக்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் வகுப்புகளை தொடருமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ப்ரி-யுனிவர்சிட்டி வகுப்புகள் எனப்படும் மேல்நிலை பள்ளிக்கு நிகரான கல்வி நிலையங்கள் மற்றும் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு எந்த முடிவையும் எட்டவில்லை.

திங்களன்று கல்வி நிலையங்களை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறையை நீட்டித்து, பள்ளிகளின் விடுமுறையை குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதனால் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை என்பது உறுதியாகிறது. இதற்கிடையே ஹிஜாப் விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு முகமையான என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று உடுப்பி எம்எல்ஏவான ரகுபதி பட் கோரிக்கை வைத்துள்ளார். ஹிஜாப் விவகாரம் முதலில் வெடித்த உடுப்பி ப்ரி-யுனிவர்சிட்டி அரசு மகளிர் கல்லூரியை மையமாகக்கொண்டு இந்த விசாரணை தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE