கல்வி நிலையங்களுக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரும் விவகாரம் கர்நாடகாவில் அதிதீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் அருணாசலப் பிரதேசத்தின் தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்கள் பாரம்பரிய உடையில் பள்ளிக்கு வர அனுமதிப்பது என்று ஒருமனமாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
2022-23 கல்வியாண்டின் புதிய திட்டத்தின்கீழ் திங்கள் தோறும் அருணாசலப் பிரதேசத்தின் அனைத்து தனியார் பள்ளியில் படித்துவரும் பழங்குடியின உள்ளிட்ட அனைத்து சமூக பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளும் தங்களது பாரம்பரிய ஆடைகளை உடுத்தி பள்ளி செல்லும்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 180-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை உறுப்பினராகக் கொண்ட அருணாசலப் பிரதேசம் தனியார் பள்ளி மற்றும் குழந்தைகள் நலக் கூட்டமைப்பு இந்த முடிவை அறிவித்துள்ளது.
இது குறித்து, அருணாசலப் பிரதேசம் தனியார் பள்ளி மற்றும் குழந்தைகள் நல கூட்டமைப்பின் துணைத் தலைவர் தார் ஜானி பத்திரிகையாள சந்திப்பில் நேற்று (பிப்.11) கூறுகையில், “அருணாசலப் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி மற்றும் துணை பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். பழங்குடியினத்தைச் சேராத மக்களும் இங்கு உள்ளனர். இந்நிலையில் அனைத்து விதமான சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும் தங்களது பாரம்பரிய உடையை அணிந்து திங்கள்தோறும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம். இந்த புதிய விதியை அனைத்து மாணவர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதே நேரம் அவரவர் இனக்குழுவின் பிரத்தியேக ஆடைகளை அணிந்துவர முழு சுதந்திரம் உண்டு. உதாரணத்துக்கு நிஷி இனக்குழுவைச் சேர்ந்த மாணவி அல்லது மாணவன் நிஷி ஆடை அணிந்துவர வேண்டும். பழங்குடி அல்லாதவர்கள் அவர்களுடைய சமூகம் பின்பற்றும் பாரம்பரிய ஆடையை அணிந்து வர வேண்டும். இதை கடைப்பிடிக்கத் தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
அருணாசலப் பிரதேசத்தில் பெரும்பான்மையினராய் வாழ்ந்துவருபவர்கள் நிஷி பழங்குடியினத்தவர்கள். இவர்களது நிஷி மாணவர் சங்கம் ஏற்கெனவே இந்த கோரிக்கையை மாநில அரசிடம் முன்வைத்ததாக தார் ஜானி தெரிவித்தார். பெற்றோரிலும் ஒரு பிரிவினர் இதனை வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார். உள்ளூர் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பறைசாற்ற இந்த முடிவு கைகொடுக்கும். குறிப்பாக உள்ளூர் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த இந்த திட்டம் கைகொடுக்கும் என்றார்.
அதேநேரம், தங்களது பாரம்பரிய உடையை மட்டுமே மாணவர்கள் கொடுக்கப்பட்ட நாளில் அணிந்து வர வேண்டுமே தவிர ஆபரணங்களையோ இன்னபிற அடையாளங்களையோ அணிந்துவரக் கூடாது. அதேபோல எந்த பள்ளியின் சீருடையிலும் மத அடையாளங்கள் பிரதிபலிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.