ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன்

By காமதேனு

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் கார் மோதி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட மத்திய உள் துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்திருக்கிறது.

2021 அக்டோபர் 3-ல், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பேரணியாகச் சென்றபோது நடந்த அந்தச் சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களில் விவசாயிகள், பாஜகவினர், ஒரு பத்திரிகையாளர் என 8 பேர் கொல்லப்பட்டனர்.

விவசாயிகள் மீது மோதிய காரில் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாய அமைப்புகள் குற்றம்சாட்டின. ஆனால், அதை அவர் மறுத்தார். சம்பவம் நடந்த தினத்தில், தான் பன்வாரிபூரில் இருந்ததாகவும், அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை வரவேற்க பாஜக தொண்டர்கள் சென்றபோது, அவர்கள் சென்ற மூன்று வாகனங்கள் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், போராட்டக்காரர்கள் பாஜகவினரைத் தடிகளால் தாக்கியதாகவும் கார்களுக்குத் தீவைத்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆசிஷ் மிஸ்ரா கூறியிருந்தார்.

அதேபோல், விவசாயிகள் எனும் போர்வையில் செயல்பட்ட சமூக விரோதிகள்தான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று ஆரம்பத்தில் அவரது தந்தை அஜய் மிஸ்ரா கூறினார். விசாரணைக்காக போலீஸார் சம்மன் அளித்தபோதும் அதை ஆசிஷ் மிஸ்ரா ஏற்கவில்லை. தனது மகனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால்தான் போலீஸ் விசாரணைக்குச் செல்லவில்லை என அஜய் மிஸ்ரா கூறியிருந்தார்.

இதற்கிடையே ஆசிஷ் மிஸ்ராவைக் கைது செய்ய வேண்டும் எனக் குரல்கள் வலுத்தன. அக்டோபர் 9-ல் அவர் கைதுசெய்யப்பட்டார்.

ஆசிஷ் மிஸ்ரா கைதுசெய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஹாரன்பூர் டிஐஜி உபேந்திர அகர்வால், போலீஸார் நடத்திய விசாரணையின்போது ஆசிஷ் மிஸ்ரா முரண்டு பிடித்ததாகவும், சில கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை என்றும் கூறினார்.

ஆசிஷ் மிஸ்ரா மற்றும் அங்கித் தாஸ் ஆகியோரின், உரிமம் பெற்ற துப்பாக்கிகளிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சான்றுகள் கிடைத்ததாக, நவம்பர் 9-ல் தடயவியல் துறையினர் கூறியிருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் அஜய் மிஸ்ரா மீதும் புகார்கள் எழுந்தன. போராட்டம் நடத்திவந்த விவசாயிகளுக்கு எதிராக அவர் கடுமையாகப் பேசிய காணொலிகளும் வெளியிடப்பட்டன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்திவந்தன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளில் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஜாட் சமூகத்தினரும் கணிசமானவர்கள். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜாட் சமூகத்தினர் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் எனப் பேசப்பட்டது. முதல் கட்ட வாக்குப் பதிவு மேற்கு உத்தர பிரதேசத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நேற்று பிரதமர் மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது லக்கிம்பூர் கெரி சம்பவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது “உச்ச நீதிமன்றம் எந்த கமிட்டியை அமைக்க வேண்டும் என விரும்பியதோ, எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என விரும்பினாரோ அனைத்துக்கும் உத்தர பிரதேச அரசு சம்மதம் தெரிவித்தது. மாநில அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்கிறது” என மோடி பதிலளித்திருந்தார்.

தற்போது ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்குக்கும் நிலையில், தேர்தலில் இதை எதிர்க்கட்சிகள் மிகப் பெரிய பிரச்சினையாகக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE