இந்தியாவில் ட்ரோன் இறக்குமதிக்கு தடை: உடனடி அமலுக்கு வருகிறது!

By காமதேனு

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், இந்த நடவடிக்கை உடனடி அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆளில்லா சிறிய ரக விமானங்களான ட்ரோன்கள், விளையாட்டு முதல் ஆராய்ச்சி வரை பலதுறைகளில் பயனாகி வருகின்றன. அதே வேளையில் இந்த ட்ரோன்களால் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வெளிநாடு ட்ரோன்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு உடனடி தடை விதிக்கப்படுவதாக தெரிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு முன்னதாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் ட்ரோன்களுக்கு இந்தியா பல சலுகைகளை அறிவித்திருந்தது. ட்ரோன்கள் வாயிலான பயன்பாட்டினை இந்தியாவில் அதிகரிக்கும் நோக்கத்தோடும், அவை தொடர்பான ஆராய்ச்சி மேம்பாட்டுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது இந்தியாவில் ட்ரோன் உற்பத்தி அதிகரித்திருப்பதை தொடர்ந்து, விலை குறைவான வெளிநாட்டு ட்ரோன்களின் போட்டியை சமாளிக்கவே இந்த தடை அறிவிப்பு வெளியானதாக தெரிகிறது. மேலும் அதிகரிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இந்த தடைக்கு மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது.

அண்மையில் இந்திய குடியரசு தினத்தையொட்டி, முப்படையினர் பாசறை திரும்பும் நிகழ்வில் டெல்லி ஐஐடி உதவியுடன், உள்நாட்டு தயாரிப்பிலான சுமார் 1000 ட்ரோன்களை கொண்டு பல்வேறு ஒளி கலை நிகழ்ச்சிகள் வானில் நிகழ்த்தப்பட்டன. இதனை தொடர்ந்து ட்ரோன்களின் உள்நாட்டு உற்பத்தியில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குதித்துள்ளன. அவற்றுக்கு உதவும் வகையில் இறக்குமதி ட்ரோன்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.

ட்ரோன்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் உபகரணங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE