விபத்தில் காயமடைந்த இளைஞரைக் காப்பாற்றிய சோனு சூட்!

By காமதேனு

சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை நடிகர் சோனு சூட் காப்பாற்றிய சம்பவம் பரவலான பாராட்டுகளைப் பெற்றுத் தந்திருக்கிறது.

விஜயகாந்த் நடித்த ‘கள்ளழகர்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் சோனு சூட். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர், தொடர்ந்து, ‘மஜ்னு’, ‘சந்திரமதி’, ‘ஒஸ்தி’, ‘அருந்ததி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய் ஆன்டனி நடித்துள்ள ‘தமிழரசன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

இவர், கரோனா பொதுமுடக்க காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்கள் வீடு திரும்ப, போக்குவரத்து வசதிகளை இலவசமாக ஏற்பாடு செய்து தந்ததன் மூலம் பாராட்டப்பட்டார். வெளிநாடுகளில் தவித்துக்கொண்டிருந்த மாணவர்கள் உட்பட பலர் தாயகம் திரும்ப உதவினார். விவசாயிக்கு டிராக்டர், பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை உட்பட பல உதவிகளைச் செய்துவருகிறார்.

இந்நிலையில், சாலை விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்டு நடிகர் சோனு சூட் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பஞ்சாம் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள கோடக்புரா நெடுஞ்சாலையில் கடந்த திங்கள்கிழமை (பிப்.7) இரவு கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு காரில், 19 வயது வாலிபர் தலையில் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாகச் சென்ற நடிகர் சோனு சூட், உடனடியாகத் தனது காரை நிறுத்தினார்.

ஓட்டுநர் இருக்கையில் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை, தன் கையாலேயே தூக்கி மற்றொரு காருக்குக் கொண்டு சென்றார். பிறகு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவர் நலமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞரை சோனு சூட் காப்பாற்றிய காணொலியை அவரது தொண்டு நிறுவனம், ’ஒவ்வொரு உயிரும் முக்கியம்’ என்று குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இதையடுத்து இணையவாசிகள் சோனு சூட்டை வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE