31 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் ரத்து!

By ஆர்.என்.சர்மா

மேற்கு வங்க மாநிலத்தில் 2021 நவம்பர் தொடங்கி 2022 ஜனவரிக்குள் 31 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டு ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்தச் சோதனை மேலும் தொடர்ந்து நடந்தால் கிட்டத்தட்ட 50 லட்சம் வரை ரேஷன் அட்டைகள் ரத்தாகும் என்று தெரிகிறது.

இறந்தவர்கள் பெயரில் உள்ள ரேஷன் அட்டைகளுக்கும் போலி ரேஷன் அட்டைகளுக்கும் பொருட்களை வழங்குகின்றனர் என்று மாநில குடிமைப்பொருள் வழங்கல் துறைக்குப் பல ஊர்களிலிருந்து தொடர்ந்து புகார் கடிதங்கள் வந்தன. சில கடிதங்களில் தரப்பட்ட தகவல்களை வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் புகார்கள் உண்மை என்று தெரிந்தது.

ஒட்டுமொத்தமாக சுமார் 17 லட்சம் அட்டைகள் போலியாக இருக்கலாம் என்ற அனுமானத்தில் தொடங்கிய ஆய்வில், 31 லட்சம் அட்டைகள் போலி என்று தெரியவந்துள்ளது. ‘ஆதார்’ அட்டைகளுடன் ரேஷன் அட்டைகளை சரிபார்த்தபோது போலிகள் பிடிபட்டிருக்கின்றன.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி மத்திய அரசு மானிய விலையில் உணவு தானியங்களை 6.01 கோடிப் பேருக்கு வழங்குகிறது. மாநில அரசு எஞ்சிய விலையை, தானே மானியமாக அளித்து, அந்த 6 கோடி அட்டைதாரர்களுக்கு முழுக்கவும் இலவசமாகத் தருகிறது. போலி ரேஷன் அட்டைகளால் மாநில நிதியும் விரயமாகிவந்தது. இந்த ஆறு கோடிப் பேர் போக மேலும் 4 கோடிப் பேருக்கு மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. மொத்தமுள்ள 10.4 கோடி ரேஷன் அட்டைகளுக்கு வங்க அரசு ஆண்டுதோறும் 5,000 கோடி ரூபாயை மானியமாகச் செலவு செய்கிறது. இதுவரை ரத்தான 31 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் காரணமாக எவ்வளவு மானியம் மிச்சப்படும் என்று கேட்டதற்கு, இன்னும் கணக்கிடவில்லை என்று அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.

மார்ச் இறுதிக்குள் இதே வேகத்தில் போனால் 50 லட்சம் போலி அட்டைகள் ரத்தாகும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். மொத்தமாக எவ்வளவு ரேஷன் அட்டைகள் போலியாக இருக்கும் என்று மதிப்பிட முடியவில்லை. போலி ரேஷன் அட்டைகளை அடையாளம் காணும் அதே நேரத்தில், ரேஷன் பொருட்கள் தேவைப்படும் ஒருவரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக இருக்கின்றனர்.

இதனால் வெவ்வேறு வகைகளில் தங்களுடைய ஆய்வுகளைக் கவனமாக மேற்கொண்டு, போலிதான் என்பது உறுதியான பிறகே ரத்து செய்கின்றனர். இதனால் ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரையில் மாநில அரசுக்கு மானியச் செலவு மிச்சப்படும் என்று கணித்துள்ளனர். தகுதியான ரேஷன் அட்டைகள் ரத்தாகிவிடக் கூடாது என்று வெகு கவனத்துடன் செயல்படுவதால் இதில் தாமதம் ஏற்படுகிறது என்று துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE