‘எதை அணிவது என்பதைத் தீர்மானிப்பது பெண்ணின் உரிமை!’ - ஹிஜாப் விவகாரத்தில் பிரியங்கா காந்தி ட்வீட்

By காமதேனு

கர்நாடகத்தில், கல்லூரி மாணவிகள் வகுப்புகளுக்கு ஹிஜாப் அணிந்துவருவதற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மாணவிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருக்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

கடந்த சில நாட்களாக, கர்நாடகத்தின் உடுப்பி, சிக்மகளூர், மாண்டியா ஆகிய மாவட்டங்களின் பல்வேறு நகரங்களில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் தொடர்பாக இந்துத்துவ அமைப்பினரும் சில மாணவர்களும் நடத்திவரும் போராட்டங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சில கல்லூரிகள் ஹிஜாப் அணிந்துவர தடை விதித்திருக்கின்றன. அதற்கு முஸ்லிம் மாணவிகள் துணிச்சலுடன் காட்டும் எதிர்ப்புணர்வும், மதநல்லிணக்க எண்ணம் கொண்ட இந்து மாணவ - மாணவிகள் அவர்களுக்கு வழங்கியிருக்கும் தார்மிக ஆதரவும் சமூக வலைதளங்களில் மிகப் பெரிய அளவில் பேசுபொருளாகியிருக்கின்றன.

நேற்று மாண்டியா மாவட்டத்தில், ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை முற்றுகையிட்டு, ’ஜெய் ஸ்ரீராம்’ எனச் சிலர் முழக்கமிட்டபோது, பதிலுக்கு அந்தப் பெண் துணிச்சலுடன் ‘அல்லாஹு அக்பர்’ என முழக்கமிட்டார். அவருக்கு அக்கல்லூரியைச் சேர்ந்தவர் பாதுகாப்பு அளித்தனர். இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கும் மதநல்லிணக்கத்துடன் செயல்பட்டவர்களுக்கும் சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ஷிவ்மோகா மாவட்டத்தில் கொடிக் கம்பம் ஒன்றில், தேசியக் கொடியை அகற்றிவிட்டு காவிக் கொடியை சில மாணவர்கள் ஏற்றியதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஷிவ்மோகா மாவட்ட எஸ்.பி, காலியாக இருந்த கம்பத்தில்தான் காவிக் கொடியை மாணவர்கள் ஏற்றியதாகக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.

இந்நிலையில், “அது பிகினியாக இருந்தாலும் சரி, முக்காடாக இருந்தாலும் சரி, ஜீன்ஸாக இருந்தாலும் சரி அல்லது ஹிஜாபாக இருந்தாலும் சரி, ஒரு பெண் என்ன அணிய விரும்புகிறாள் என்பதை முடிவுசெய்ய அவளுக்கு உரிமை இருக்கிறது. அது இந்திய அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்திருக்கும் உரிமை ஆகும். பெண்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள்” என்று ட்வீட் செய்திருக்கிறார் பிரியங்கா காந்தி.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், ‘லட்கி ஹூம், லட் சக்தீ ஹூம்’ (பெண் நான்; போராட முடியும் என்னால்) எனும் முழக்கத்தை முன்னெடுத்து வரும் பிரியங்கா காந்தி, பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் பிரச்சாரம் நடத்திவருகிறார். பெண்கள் உரிமை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட அம்சங்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதானமாக இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில், தனது ட்வீட்டில், ‘லட்கி ஹூம், லட் சக்தீ ஹூம்’ எனும் வாசகத்தையும் ஹேஷ்டேகாக அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE