“எனக்கு ட்விட்டர் கணக்கே கிடையாது” - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாந்திஸ்ரீ

By காமதேனு

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் சாந்திஸ்ரீ துலிபடி பண்டிட், ட்விட்டரில் முன்பு வெறுப்புக் கருத்துகளை எழுதியதாக எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் விளக்கமளித்திருக்கிறார். “மறுப்பு எனும் பேச்சுக்கே இடம் இல்லை. எனக்கு ட்விட்டர் கணக்கே இல்லை. இவையெல்லாம் திட்டமிட்ட பிரச்சாரங்கள்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நியமனமும் சர்ச்சையும்

மத்திய கல்வி அமைச்சகம் பிப்ரவரி 7-ல் அவரது நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சாந்திஸ்ரீ, மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தவர். அவர் எம்.ஃபில் முடித்ததது ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்தான். சர்வதேச உறவுகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வையும் அப்பல்கலைக்கழகத்தில்தான் அவர் மேற்கொண்டார்.

இதற்கிடையே, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவர் நியமிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகி சில மணி நேரங்களிலேயே, அவரது ட்வீட்களின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் எனும் பெயரில் பல பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவின. அதில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை ‘ஒட்டுண்ணிகள்’ என்றும், ‘தரகர்கள்’ என்றும் விமர்சித்ததாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதேபோல், பத்திரிகையாளர்களையும் அரசியல் தலைவர்களையும் விமர்சிக்கும் பதிவுகளுக்கு அவர் ஆதரவு தெரிவித்ததாகவும் காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் என்டிடிவி செய்திச் சேனலில் இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் அவர், “முட்டாள்தனம் பரப்பப்படுகிறது. இந்த ட்விட்டர் கணக்கை யார் தொடங்கினார் என்று எனக்குத் தெரியாது” என்று கூறியிருக்கிறார். தான் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதற்குப் பின்னர், இந்த ட்வீட்டுகள் பரப்பப்படுவதன் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். தனது நியமனத்தை ஜீரணிக்க முடியாதவர்கள் தன்னை அவமதிக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார். தமிழகத்திலிருந்து வந்த ஒரு பெண் இந்தப் பொறுப்புக்கு வந்திருப்பதை விரும்பாதவர்கள் செய்யும் வேலை இது என்றும் அவர் கூறியிருக்கிறார். ”நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவள் அல்ல. நான் பாகுபாடு அற்றவள்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதேசமயம், அவரைப் பற்றி வேறு சில சர்ச்சைகளும் நிலவுகின்றன. புணே பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்கள் மையத்தின் தலைவராக அவர் இருந்தபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக, 2009-ல் அவர் மீது ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாகவும் பலர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். முறையான ஒப்புதல் இன்றி, கிட்டத்தட்ட 1,800 மாணவர்களின் சேர்க்கைக்கு அவர் அனுமதி அளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

இதற்கும் அவர் விளக்கமளித்திருக்கிறார். “இவ்விஷயத்தில் என் விளக்கத்தைத் தெரிவித்துவிட்டேன். அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. என் மீது தவறு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சகம் சான்றளித்துவிட்டது. அதுதொடர்பான அறிக்கையைப் பாருங்கள். மகாராஷ்டிர அரசுக்கு ஆவணங்களை அளித்திருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், இந்த நியமனத்துக்குப் பின்னர் ஊடகங்களுக்கு அவர் அளித்திருந்த அறிக்கையின் வாசகங்களில் நிறைய பிழைகள் இருந்ததாக, பாஜக எம்பி வருண் காந்தி உள்ளிட்ட பலர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்திருக்கும் சாந்திஸ்ரீ, “நான் இத்தனை ஆண்டுகள் கல்வித் துறையில் இருந்திருக்கிறேன். எனது சுயவிவரத் தகவல்களைப் படித்துப் பாருங்கள்” என்று கூறியிருக்கிறார். மேலும், “ஒரு பெண்ணை வரவேற்கும் விதம் இதுதானா? என்னைப் பற்றிய ஆக்கப்பூர்வமான விஷயங்களை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE