’ஹிஜாப் எனது உரிமை’: வைரலாகும் மாணவியின் பேச்சு

By சாதனா

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்குள் வரும் விவகாரம் கர்நாடகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையில் கர்நாடகத்தில் உள்ள மண்டியா பகுதியில் கழுத்தில் காவி துண்டு அணிந்த மாணவர் கூட்டம் ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என்று முழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது புர்கா, ஹிஜாப் அணிந்த மாணவி ஒருவர் தனது இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கி கல்லூரியை நோக்கி நடந்துச் சென்றார். அவரை ஏளனம் செய்யும் விதமாக அந்த மாணவர்கள் உரக்க ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூடுதலாகக் கூச்சலிட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக அந்த மாணவி, ‘அல்லாஹு அக்பர்’ என்று முழங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

பத்திரிகையாளர் ஒருவர் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த மாணவி துணிச்சல் மிகுந்தவர் என்று பாராட்டப்பட்டு தமிழகத்தின் சமூக ஊடகங்கள் முழுவதும் அவரது வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. கரத்தை உயர்த்தியபடி ‘அல்லாஹு அக்பர்’ என்று அந்த மாணவி முழங்கிய காட்சி சித்திரமாகவே தீட்டப்பட்டு பலரது சமூக ஊடக முகப்பு படமாகப் பதிவு செய்யப்பட்டுவருகிறது.

மேலும் பத்திரிகையாளர்களிடம் மாணவி பேட்டி அளித்த காணொலியும் அவரது துணிச்சலுக்கான சான்றாக மாறியுள்ளது. கன்னடத்தில் பேசிய அவர், “ஹிஜாப் எங்கள் உரிமை. அதை யாரும் பறிக்க முடியாது. கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் பேசுகையில் சுதந்திரத்தின்போது இந்த நாடு இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. ஹிஜாப் அணிவதென்றால் அவர்கள் அந்த பகுதிக்குச் சென்றிருக்க வேண்டும் என்றார். இந்திய அரசமைப்புப்படி இந்தியா மதச்சார்பற்ற நாடு. மதச்சார்பற்ற நாடு என்றால் நான் எந்த மதத்தையும் பின்பற்றலாம். இங்கு அனைவரும் சமம். சமத்துவ உரிமையும் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான உரிமையும் அவரவர் விருப்பப்பட்டபடி வாழ உரிமையும் அனைவருக்கும் உள்ளது. நாங்கள் விண்ணப்பித்தபோது ஹிஜாப் அணியக்கூடாது என்று எந்த கல்லூரியிலாவது தெரிவித்தார்களா? கடந்த இரண்டு மூன்று வாரங்களில் எங்கிருந்து இந்தப் பிரச்சினை சமூகத்துக்குள் வந்தது?...இங்கு அரசியல் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் எங்களுடைய உரிமை எங்களுக்குத் திரும்ப வேண்டும்” என்றார்.

மாணவியின் பேச்சை பலர் தங்களது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து அவருக்கும் அவரது கருத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE