“இஸட் பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” - ஒவைஸியிடம் கோரிக்கை விடுத்த அமித் ஷா

By காமதேனு

மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அசதுதீன் ஒவைஸி சென்ற கார் மீது கடந்த வாரம் துப்பாக்கிச் சூடு நடந்தது. உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அவர் திரும்பும் வழியில், இந்தச் சம்பவம் நடந்தது, இதையடுத்து, அவருக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. எனினும், அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில், மக்களவையில் இதுதொடர்பாக இன்று பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, இஸட் பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுமாறு ஒவைஸியைக் கேட்டுக்கொண்டார்.

“அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒவைஸி உயிர் தப்பினார். எனினும், அவரது காரின் கீழ்ப் பகுதியில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த தடயங்கள் பதிவாகியிருக்கின்றன. மூன்று சாட்சிகள் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்திருக்கின்றனர். இதுதொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்ட அமித் ஷா, இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடமிருந்து இரண்டு பிஸ்டல்கள், ஒரு மாருதி ஆல்டோ கார் ஆகியவை போலீஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். “குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்துக்குப் போலீஸார் சென்று ஆய்வு நடத்தினர்” என்று கூறிய அமித் ஷா, உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், “ஒவைஸியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு, குண்டுதுளைக்காத காருடன் இஸட் பிரிவு பாதுகாப்பை வழங்க அரசு முடிவுசெய்திருக்கிறது. ஆனால், அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இந்தப் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அவை உறுப்பினர்கள் மத்தியில், நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அமித் ஷா கூறினார்.

அதேவேளையில், “சம்பவம் நடந்த ஹாப்பூர் மாவட்டத்தில் ஒவைஸியின் கூட்டங்கள் எதுவும் முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை. அவரது பிரச்சாரக் கூட்டம் தொடர்பாக மாவட்டக் கட்டுப்பாடு அறைக்கு எந்தத் தகவலும் அனுப்பப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இஸட் பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. நான் ஏ- வகுப்பு குடிமகனாகவே இருக்க விரும்புகிறேன். என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர்கள் மீது ஏன் உபா சட்டம் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்) பாயவில்லை?” என்று கடந்த வாரம் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார் ஒவைஸி. பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக அந்தச் சட்டம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், ஒவைஸி அதைச் சுட்டிக்காட்டி மக்களவையில் பேசியிருந்தார். தன் மீதான தாக்குதலின் பின்னணியில் பெரிய மனிதர்கள் சிலர் இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

ஏஐஎம்ஐஎம் கட்சித்ட் தலைவர் அசதுதீன் ஒவைஸி

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என, சச்சின், ஷுபம் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் சச்சின் தீவிர வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் மீது ஏற்கெனவே கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

இதற்கிடையே, தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் நட்சத்திர பிரச்சாரப் பேச்சாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு அம்மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE