`இந்தியா எங்களது 2வது வீடு'- சர்ச்சைக்கு ஹூண்டாய் முற்றுப்புள்ளி

By காமதேனு

ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட பதிவு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. "பொறுப்பற்ற முறையில் வெளியான கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்தியா இரண்டாவது வீடு என்றே சொல்வோம்" என்று அந்நிறுவனம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்திய கார் சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய், தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. 1967ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இதன் கிளைகளில் 1,20,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சென்னையிலும் இதன் உற்பத்தி நிறுவனம் உள்ளது. கார் விற்பனையில் இந்தியாவில் மாருதி நிறுவனத்துக்கு அடுத்ததாக நம்பர்-2 இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் பாகிஸ்தானிலும் தனது கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி பாகிஸ்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், “காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்கள் தொடர்ந்து வரும் சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 5ம் தேதி பாகிஸ்தான் அரசு காஷ்மீர் ஒற்றுமை தினம் என கடைபிடித்து வருகிறது. இதற்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட பதிவு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு எதிரான குரல் வலுத்தது.

இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியச் சந்தைக்கு உண்மையாக இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்தியா இரண்டாவது வீடு என்றே சொல்வோம். பொறுப்பற்ற முறையில் வெளியான கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின் இந்திய மக்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE