“இவிஎம் இயந்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டும்” - எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் வரவேற்பு; முன்னாள் மத்திய அமைச்சர் எதிர்ப்பு

By KU BUREAU

புதுடெல்லி: ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன’ என்று எலான் மஸ்க் கூறிய கருத்தை ராகுல் காந்தி வரவேற்றுள்ளார்.

இந்தியாவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களின்போது முழுக்க முழுக்க மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயந்திரங்களில் ஊடுருவி தரவுகளை மாற்றிஅமைக்க முடியும். வெளிப்படைத்தன்மை இதில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன.

பழைய முறைப்படி வாக்குச் சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று வழக்கும் தொடுக்கப்பட்டன. அவற்றை எல்லாம் உச்சநீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்தது. இவிஎம் இயந்திரங்களில் ஊடுருவ முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவருகிறது.

இந்நிலையில், டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் சமீபத்தில் தனது எக்ஸ் வலைதளபக்கத்தில், ‘இவிஎம் இயந்திரங்களில் மனிதர்களாலோ அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலமோ ஊடுருவும் (ஹேக்) அபாயம் உள்ளது. எனவே, இவிஎம்இயந்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்தை வரவேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவில் இவிஎம் இயந்திரங்கள் என்பது கருப்புப் பெட்டி போன்றது. இதில் வெளிப்படைத் தன்மை இல்லாத போது ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. இவிஎம் இயந்திரங்களை ஆய்வு செய்ய யாரையும் இங்கு அனுமதிப்பதில்லை’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவுக்கு பொருந்தும்: எந்தவித துல்லியமான தரவுகளும் இல்லாமல் பொதுப்படியாக எலான் மஸ்க் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. எலான் மஸ்க் கூறிய கருத்து அமெரிக்கா அல்லது மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஏனெனில்,அந்த நாடுகளில் இன்டர்நெட் இணைக்கப்பட்ட வாக்குப் பதிவுஇயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கருத்து இந்தியாவுக்குப் பொருந்தாது.

ஏனெனில், இந்திய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது, பாதுகாப்பானது. எந்த நெட்வொர்க்குடனும் இணைக்கப்படாமல் தனித்து இயங்கக் கூடியது. இந்திய இவிஎம் இயந்திரங்கள் வேறு ஒரு இயந்திரங்களுடன் இணைக்கப்படவில்லை. இதில் புளூடூத் வசதி இல்லை, வை-பை இல்லை,இன்டர்நெட் இல்லை. இதில் ஊடுருவ வாய்ப்பு என்று கூறுவதற்கு ஒரு வழியும் இல்லை.

இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE