அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட்! -மத்திய இணை அமைச்சர் பங்கஜ்

By காமதேனு

“அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும். விவசாயத் துறை உட்பட அனைத்து துறைகளும் இன்று பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்” என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று தொடங்கியது. 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் இது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதால், வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் கரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல இந்தியா மீண்டும் வரும் நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “அனைத்து துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும். விவசாயத் துறை உட்பட அனைத்து துறைகளும் இன்று பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE