பெகாசஸ் விவகாரம்: அமைச்சர்கள் உண்மை பேச வேண்டும்!

By காமதேனு

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடமிருந்து பெகாசஸ் வேவு மென்பொருளை மோடி அரசு வாங்கியதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியான செய்தி, ஒன்று நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது. இவ்விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்ததாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மீது காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருக்கின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டுவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வம், “அஷ்வினி வைஷ்ணவ் எனக்கு நல்ல நண்பர். நல்ல மனிதர். ஆனால், பெகாசஸ் தொடர்பாக அவர் தெரிவித்த தகவல்கள் உண்மை அல்ல. உண்மையைத் தெரிந்துகொள்ள நாடாளுமன்றத்துக்கு உரிமை இருக்கிறது. எனவே, அமைச்சர்கள் உண்மையான தகவல்களை நாடாளுமன்றத்தில் அளிக்க வேண்டும். அஷ்வினி வைஷ்ணவ், அரசின் உண்மை முகத்தையும், பெகாசஸ் பற்றிய உண்மைகளையும் மறைக்க முயன்றார்” என்று கூறியிருக்கிறார்.

அமைச்சர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருக்கும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி.வேணுகோபால், “பெகாசஸுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் தொடர்பு இல்லை எனக் கூறியதன் மூலம் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்திவிட்டார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர். பிரதமர் மோடி இஸ்ரேலுக்குப் பயணம் சென்றபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என உலகின் மிக நம்பகமான நாளிதழ் கூறுகிறது. அதனால்தான் நாங்கள் உரிமை மீறல் நோட்டீஸை அளிக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியிருக்கும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, அஷ்வினி வைஷ்ணவ் மீதான உரிமை மீறல் நோட்டீஸின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE