பத்ம விருது அறிவிப்பால் படரும் கசப்பு: தடுமாறுகிறதா காங்கிரஸ்?

By வெ.சந்திரமோகன்

ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜகவை எதிர்கொள்வது எப்படி எனும் விவாதம் காங்கிரசுக்குள் நடக்கிறதோ இல்லையோ, கட்சிக்குள் நிலவும் அதிருப்திகளை எப்படிக் கடப்பது எனும் கவலை அக்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. காஷ்மீர் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாதுக்குப் பத்மபூஷண் விருது வழங்கப்படும் எனும் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரசுக்குள் கசப்புணர்வு மீண்டும் படரத் தொடங்கியிருக்கிறது.

பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை வாழ்த்தி, “சரியான செயல். அவர் ‘ஆசாத்’ ஆக (சுதந்திரமாக) இருக்க விரும்புகிறார். ‘குலாம்’ஆக (அடிமையாக) அல்ல” என்று ஜெய்ராம் ரமேஷ் எழுதிய ட்வீட், குலாம் நபி ஆசாதுக்கான விருது அறிவிப்பு மீதான காங்கிரஸ் தலைமையின் அதிருப்தியைப் பட்டவர்த்தனமாகக் காட்டியது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாரும் இதுவரை குலாம் நபி ஆசாதுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவர் வேண்டும் என்றும், உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய ‘ஜி23’ தலைவர்களில் முக்கியமானவர் என்பதால், குலாம் நபி ஆசாத் மீதான இந்தப் புறக்கணிப்பு புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், விஷயம் அது மட்டுமல்ல.

மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் ஓய்வுபெற்றபோது, பிரதமர் மோடி அவருக்கு அளித்த பிரியாவிடையை யாரும் மறந்துவிட முடியாது. 2006-ல் குலாம் நபி ஆசாத் காஷ்மீர் முதல்வராக இருந்தபோது, நடந்த சம்பவம் ஒன்றைத் தனது உரையில் நினைவுகூர்ந்தார் மோடி. குஜராத்திலிருந்து காஷ்மீர் சென்றிருந்த சுற்றுலாப் பயணிகள், பயங்கரவாதத் தாக்குதலுக்கு நடுவில் மாட்டிக்கொண்டபோது, குஜராத்தின் அப்போதைய முதல்வரான தன்னை குலாம் நபி ஆசாத் தொடர்புகொண்டு பேசியதைக் குறிப்பிட்ட மோடி, “அன்று இரவு குலாம் நபி ஆசாத்திடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. தன் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து ஏற்பட்டதுபோல துடிதுடித்துப்போனார்” என்று சொல்லும்போதே நாதழுதழுத்தது. குலாம் நபி ஆசாதுக்கு மோடி சல்யூட் அடிக்க, கும்பிட்ட கையோடு குலாம் நபி ஆசாத் உருக அது ஒரு உணர்வுபூர்வமான காட்சியாக அமைந்தது.

பிரதமர் மோடியைச் சந்தித்த காஷ்மீர் தலைவர்கள் குழுவில் குலாம் நபி ஆசாத்

ஏற்கெனவே, கட்சித் தலைமைக்கு குலாம் நபி ஆசாத் பகிரங்கக் கடிதம் எழுதியதால் புகைச்சலில் இருந்த காங்கிரஸ் தலைமை மோடி நிகழ்த்திய சென்டிமென்ட் நாடகத்தை ரசிக்கவில்லை. “மாற்றங்கள் நடக்காவிட்டால், இன்னும் 50 வருடங்களுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டியிருக்கும்”, “கட்சியின் நிறுவனக் கட்டமைப்பே சிதைந்துவிட்டது” என்றெல்லாம் குலாம் நபி ஆசாத் தெரிவித்துவந்த கருத்துகள் சோனியா குடும்பத்தை மேலும் மேலும் கோபமடையவைத்தன. “பிரதமர் மோடியும் நானும் கொள்கை ரீதியாக எதிரிகளாக இருக்கலாம். ஆனால், அவரது சுயத்தை மறைக்காத பண்பை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். ஆனால், சில அரசியல்வாதிகள் மாயையில் வாழ்கின்றனர்” என்றும் குலாம் நபி ஆசாத் கூறியிருந்தார்.

மறுபுறம், கட்சித் தலைமையுடன் அணுக்கமாக இல்லாமல், காஷ்மீருக்குள்ளேயே தனது அரசியல் செயல்பாடுகளை குலாம் நபி ஆசாத் குறுக்கிக்கொண்டார். காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் என முக்கியப் பதவிகளை வகித்தவர், இந்திரா காந்தி தொடங்கி சோனியா காந்தி வரை காங்கிரஸ் தலைமையின் மிகுந்த நம்பிக்கைக்குரிய தலைவர் என அவரது அரசியல் பயணம் விரிவானது. இத்தனை அனுபவம்கொண்ட அவரை, நாடாளுமன்ற உறுப்பினராக தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தலைமை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என ஜி23 தலைவர்கள் ஆதங்கப்பட்டனர். இந்நிலையில், அவருக்கு அளிக்கப்படும் கவுரவத்தால் மகிழ்ச்சியடைந்திருக்கும் அவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

ஜி23 தலைவர்களில் முக்கியமானவர்களான குலாம் நபி ஆசாதும், கபில் சிபலும்...

குறிப்பாக, ஜி23 தலைவர்களில் முக்கியமானவரான கபில் சிபல், “பொதுவாழ்வில் அவரது பங்களிப்பை தேசமே அங்கீகரித்திருக்கும் நிலையில், அவரது சேவை தேவையில்லை எனக் காங்கிரஸ் இருப்பது நகைமுரணானது” என்று ட்வீட் செய்து அனலை இன்னும் அதிகரித்திருக்கிறார். “இன்னொரு தரப்பைச் சேர்ந்த அரசே ஒருவரது பொதுச் சேவைகளை அங்கீகரிப்பது நல்ல விஷயம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறியிருப்பதும் பல்வேறு உள்ளர்த்தங்கள் நிறைந்தது. “இது அரசு அளிக்கும் கவுரவம், ஒரு கட்சி சார்பாக அளிக்கப்படுவது அல்ல” என அஷ்வனி குமார் போன்ற மூத்த தலைவர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். குலாம் நபி ஆசாத் மீதான விமர்சனங்களை, கரண் சிங் போன்ற மூத்த தலைவர்களும் கண்டித்திருக்கின்றனர்.

அரசியல் எல்லைகளைத் தாண்டி தலைவர்களுக்கு பத்ம விருதுகள் அளிக்கப்படுவது புதிதல்ல. இதற்கு முன்னர், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாஜ்பாய்க்கு பத்ம விபூஷண் விருது அளிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சிக்காலத்தில்தான் பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருதும் அளிக்கப்பட்டது. எனினும், தற்போது தேர்தல் காலம் என்பதாலும், எதிர்க்கட்சிகளில் நிலவும் விரிசல்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதில் பாஜக கைதேர்ந்தது என்பதாலும் குலாம் நபி ஆசாத்துக்கு அறிவிக்கப்பட்ட விருது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டுவிட்டது. புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு விருது அறிவிக்கப்பட்டதே, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மத்தியில் புகைச்சலையும், திரிணமூல் காங்கிரசுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும் முயற்சி எனச் சிலர் கருதுகிறார்கள். அதேவேளையில், பத்ம விருதுகள் மத்திய அரசால் கொடுக்கப்படுகின்றவே தவிர, விருதாளர்கள் பாஜகவால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதையும் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி

எது எப்படியோ, இதை பாஜக மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. ஒட்டுமொத்த தேசமும் குலாம் நபிக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை வரவேற்கும்போது, கட்சிக்குள் அவருக்கு மதிப்பளிக்க காங்கிரஸ் கட்சி தயங்குகிறது என பாஜகவினர் கொளுத்திப்போடுகின்றனர். இதையடுத்து, காங்கிரஸிலிருந்து குலாம் நபி வெளியேறுவாரா என்றெல்லாம் பேச்சுகள் எழுந்திருக்கின்றன. கட்சியைவிட்டு வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம் என்ற விட்டேத்தியான நிலைப்பாட்டில் ராகுல் காந்தி இருக்கிறார்.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியோ இதுபோன்ற சிக்கல்களுக்கு முகங்கொடுக்கிறாரா என்றே தெளிவாகத் தெரியவில்லை. மக்களிடம் செல்வாக்கு பெற்ற மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் கட்சித் தலைமையால் ஒழிக்கப்பட்டதன் பலனை, பல்வேறு மாநிலங்களில் இன்றுவரை காங்கிரஸ் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. அதைச் சொல்லிச் சொல்லியே பாஜகவினரும், பாஜக ஆதரவு ஊடகங்களும் காங்கிரஸை மேலும் மேலும் பலவீனப்படுத்திவருகின்றன.

ரியாஸ் பஷீர் நாஸ் போன்ற காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாதுக்குக் கிடைத்த இந்த கவுரவத்தால் உளப்பூர்வமாக மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டால், காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக குலாப் நபி ஆசாத் தான் நிறுத்தப்பட வேண்டும். அவரைத் தவிர, காஷ்மீர் காங்கிரஸில் சொல்லிக்கொள்ளும் விதத்தில் வேறு தலைவர்கள் யாரும் இல்லை.

நாடாளுமன்றத்தில் குலாம் நபி ஆசாத்

காஷ்மீரின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஃபரூக் அப்துல்லா, “ஒரு அரசியல் தலைவராக, ஒரு காங்கிரஸ்காரராக நிறைய உழைத்திருக்கிறார். எனவே, அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவது பொருத்தமானது” என வாழ்த்தியிருக்கிறார். இந்தச் சூழலில், ‘குலாமா?’ அல்லது ‘ஆசாதா?’ என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்காமல் தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்துவதுதான் காங்கிரசுக்கு முக்கியம். உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால், 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் காங்கிரசுக்குத் தெளிவு இல்லாவிட்டால், குலாம் நபி ஆசாத் சொன்னதுபோல், இன்னும் 50 வருடங்களுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டியிருக்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE