பாஜக சொத்து ரூ.4,874 கோடி ; காங்கிரஸ் ரூ.588 கோடி!

By காமதேனு

பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.4,874 கோடியாக உயர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ரூ.698 கோடி சொத்துகளுடன் 2-வது இடத்திலும், ரூ.588 கோடி சொத்துகளுடன் காங்கிரஸ் 3-வது இடத்திலும் இருக்கின்றன.

2019-2020 நிதியாண்டில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளன. இந்த சொத்து விவரங்களை தொகுத்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில், நிலையான சொத்துகள், கடன் மற்றும் முன்தொகை, வைப்புநிதி, மூலதனத்தில் வரி பிடித்தம், மூலதனம் மற்றும் இதர சொத்துகள் என 6 இனங்களின்கீழ் சொத்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, அந்த நிதியாண்டில், பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.4,874 கோடி என தெரியவந்துள்ளது. தேசிய கட்சிகளில் சொத்து கணக்கில் பாஜக முதலிடத்தில் உள்ளது. அடுத்து பகுஜன் சமாஜ் கட்சி ரூ.698 கோடி சொத்துகளுடன் 2-வது இடத்திலும், ரூ.588 கோடி சொத்துகளுடன் காங்கிரஸ் 3-வது இடத்திலும் இருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ரூ.569 கோடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.247 கோடி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ரூ.29 கோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.8 கோடி சொத்துகளும் உள்ளன. எல்லா கட்சிகளும் வைப்புநிதியில்தான் அதிக சொத்துகளை வைத்திருந்தாலும், பாஜகவுக்கு வைப்புநிதியாக ரூ.3,253 கோடி உள்ளது.

மாநில கட்சிகளில், சமாஜ்வாடி கட்சி ரூ.563.47 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி ரூ.301.47 கோடி சொத்துகளுடன் 2-வது இடத்திலும், அதிமுக ரூ.267.61 கோடி சொத்துகளுடன் 3-வது இடத்திலும் இருக்கின்றன. மாநில கட்சிகளில் சமாஜ்வாடி கட்சி வைப்புநிதியாக ரூ.434.21 கோடியும், அதிமுக ரூ.246.90 கோடியும், திமுக ரூ.162.42 கோடியும் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE