கனடா எல்லையில் குளிரில் சிக்கி உயிரிழந்த இந்திய குடும்பம்!

By காமதேனு

இந்திய குடும்பம் ஒன்று போதிய ஆவணங்களின்றி அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது கனடா எல்லையில் கடுங்குளிரில் சிக்கி உயிரிழந்தது தற்போது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தைச் சோ்ந்த ஜெகதீஷ் பல்தேவ்பாய் பட்டீல் (39)- வைஷாலிபென் ஜெகதீஷ்குமார் பட்டீல் (37) தம்பதிக்கு விஷாங்கி (11), தார்மிக் (3) என்ற குழந்தைகள் இருந்தனர். இந்த குடும்பத்தினர் கனடாவில் இருந்து உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவிற்குள் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, கனடா எல்லைப் பகுதியில் கடும் குளிர் நிலவியுள்ளது. இந்த குளிரில் சிக்கிய இந்திய தம்பதி மற்றும் இரண்டு குழந்தைகள் இறந்துள்ளனர்.

அமெரிக்காவுக்குள் போதிய ஆவணங்களின்றி நுழைந்த நபா்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு நிகழ்ந்த தேடுதலின்போது இந்தியா்கள் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் உடல்கள் ஜனவரி 26ம் தேதி உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 7 பேரும், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு மனிதா்களைக் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்கா் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்கா, கனடா அதிகாரிகளிடமிருந்து தொடா்ந்து தகவல்களை சேகரித்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் இருந்த 5 இந்தியா்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அவா்களுக்கான தூதரக உதவிகளை வழங்குவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE