டெல்டாவை காணடித்த ஒமைக்ரான்: கேரள முன்னுதாரணம்!

By காமதேனு

இந்தியாவில் கரோனா பாசிட்டிவ் உறுதியாகும் அனைவரிடத்தும், ஒமைக்ரான் திரிபு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக, கேரளாவின் கரோனா தொற்றாளர்களில் 94 சதவீதத்தினர் ஒமைக்ரானுக்கு ஆளாகி வருவதாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றுப் பரவலை முடிவுக்கு கொண்டுவரப்போகும் திரிபு, இயற்கையே வழங்கிய கரோனா தடுப்பூசி என்றெல்லாம் புகழப்படும்(!) ‘ஒமைக்ரான் திரிபு’ இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் சுமார் 80 சதவீதத்தை கடந்திருந்த ஒமைக்ரான், தற்போது 90 சதவீதத்தை கடந்திருக்கிறது. அதேபோன்று, ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானோர் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பதாக ஐசிஎம்ஆர் உறுதி செய்துள்ளது.

டெல்டா பரவல் காலத்தில் கரோனா நோயாளிகள் கண்ட துயரங்கள் ஒமைக்ரான் காலத்தில் இல்லை. ஏற்கெனவே தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவர்கள், தடுப்பூசிகளின் முழுமையான டோஸ்களை போட்டுக்கொண்டோர் என சகலமானவர்களையும் ஒமைக்ரான் பீடிக்கிறது. ஆனால் அவர்களில் கணிசமான எண்ணிக்கையிலேயே, நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி அனுமதிக்கப்பட்டவர்களிலும், சொற்பமானவர்களுக்கே ஐசியூ மற்றும் ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. இந்தியாவில் எந்த தொற்று இறக்குமதியானாலும், அதிகம் பாதிப்புக்கு ஆளாகும் கேரளத்தின் நிலவரமே இதற்கு சிறந்த உதாரணம்.

கேரள சுகாதார அமைச்சரான வீணா ஜார்ஜ், “கேரளாவில் கரோனா பாசிட்டிவ் தொற்றாளர்களில் 94 சதவீதத்தினருக்கு ஒமைக்ரான் உறுதியாகி வருகிறது. வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே டெல்டா திரிபுக்கு ஆளாகி உள்ளார்கள். இந்த வகையில் கேரளா ஒமைக்ரான் அலைக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களிலும் வெறும் 3.6 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவமனை உதவி தேவைப்படுகிறது. அதிலும் 0.7 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆக்சிஜன் வசதியுடனான படுக்கை வசதி தேவைப்படுகிறது. 0.6 சதவீதத்தினர் மட்டுமே ஐசியூ வசதியை நாடுகிறார்கள்’’ என தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பரவலில் கேடுகள் குறைந்திருப்பதால், மாநிலங்கள் கூடுதல் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. பிப்.1 முதல் பள்ளி கல்லூரிகள் திறப்பு, இரவு(ஜன.28முதல்), ஞாயிறு ஊரடங்குகள் ரத்து ஆகியவற்றை தமிழகம் அறிவித்துள்ளது. எனினும் வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகளில் 50 சதவீத பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE