மீட்கப்பட்ட மிராம்: மிச்சம் இருக்கும் கேள்விகள்!

By சந்தனார்

கடத்தப்பட்டதாகக் கருதப்பட்ட அருணாசல பிரதேச இளைஞர் மிராம் தரோனைச் சீன ராணுவம் இந்தியாவிடம் இன்று ஒப்படைத்திருக்கிறது. இதையடுத்து, ஏறத்தாழ இரண்டு வாரங்கள் நிலவிய பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

17 வயது இளைஞரான மிராம் தரோன், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (Line of Actual Control) அருகே, சியான் நதி (அருணாசல பிரதேசத்தில் பிரம்மபுத்ரா நதி அவ்வாறு அழைக்கப்படுகிறது) உள்ள ஜிதோ பகுதியிலிருந்து காணாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகின. சம்பவத்தை நேரில் பார்த்த அவரது நண்பர் ஜானி யய்ங், சீன ராணுவம் மிராமைப் பிடித்துச் சென்றதாகவும், தான் எப்படியோ தப்பி வந்துவிட்டதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

மிராம் கடத்தப்பட்டதாகவே பாஜக எம்.பி தாபிர் காவ் ட்வீட் செய்திருந்தார். சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்தே அவரைக் கடத்திச் சென்றது எனத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மிராமை மீட்குமாறு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அரசுக்கு அழுத்தம் தந்துவந்தனர்.

அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் உதவுமாறும், ஒருவேளை அவரைச் சிறைப்பிடித்திருந்தால் திருப்பி அனுப்புமாறும் சீன ராணுவத்திடம் இந்திய ராணுவம் கோரியிருந்தது.

அவரை சீன ராணுவம் பிடித்துச் சென்றதாகச் சிலர் தெரிவித்ததாக, ஜனவரி 25-ல் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்வீட் செய்திருந்தார். எனினும், மிராமைக் கடத்தவில்லை என்றும், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வந்த அவரைக் கண்டுபிடித்து மீட்டதாகவும் சீன ராணுவம் தெரிவித்தது.

மிராமை மீட்பது தொடர்பாக ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை, ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தை என இரு வழிகளிலும் இந்தியா சீனாவிடம் அழுத்தம் கொடுத்துவந்தது. இந்தச் சூழலில், மிராம் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு நாள் தாமதம்

நேற்றே இந்தியாவிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என சீன ராணுவம் தெரிவித்திருந்தது. எனினும், மலைப் பகுதியான அங்கு வானிலை மோசமாக இருந்ததால், அதில் தாமதம் ஏற்பட்டது.

மிராமைப் பத்திரமாக மீட்பதற்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டதாகவும், அவரைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருக்கிறார். “மிராமை இந்திய ராணுவத்திடம் சீன ராணுவம் ஒப்படைத்திருக்கிறது. அவருக்கு மருத்துவப் பரிசோதனை உட்பட, உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்டாரா?

இந்நிலையில், மிராம் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டாரா எனும் கேள்வி எஞ்சி நிற்கிறது. இதுகுறித்து, ரிபப்ளிக் சேனலுக்குப் பேட்டியளித்த அருணாசல பிரதேச எம்எல்ஏ நினோங் எரிங், ”கிராமத்து இளைஞரான மிராம் தரோன் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தித்தோம். அது நடந்தேறியிருக்கிறது. இதற்காக, இந்திய ராணுவத்துக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறினார். ரிபப்ளிக் சேனலிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய பாஜக எம்.பி தாபிர் காவும், மிராம் மீட்கப்பட்டதற்குப் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

எனினும், மிராம் கடத்தப்பட்டாரா என்பது குறித்து யாரும் உறுதியான தகவல்களைச் சொல்லவில்லை. மிராம் ஊர் திரும்பிய பின்னர் அவர் சொல்லும் வார்த்தைகளை வைத்துதான் அவர் கடத்தப்பட்டாரா, வழிதவறிச் சென்று சீன ராணுவத்தால் மீட்கப்பட்டாரா என்பது தெரியவரும். அப்படிக் கடத்தப்பட்டிருந்தால், இந்திய எல்லைக்குள் வந்து அவரைச் சீன ராணுவம் கடத்தியதா என்பதும் உறுதிசெய்யப்படும். எனினும், இரு நாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட பிரச்சினை என்பதால், அவர் வெளிப்படையாக ஊடகங்களிடம் பேசுவாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE