ரயில்களுக்கு மாணவர்கள் தீ வைப்பு; ரயில்வே அறிவிப்பால் போர்க்களமான பிஹார்

By காமதேனு

பிஹார் மாநிலத்தில் ரயில்வே தேர்வு முறையை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பல்வேறு பகுதிகள் போர்க்களம் போல காட்சியளிக்கின்றன. ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 15ம் தேதி வெளியாகின. தேர்வு முடிவுகள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு 2ம் நிலை தேர்வுகள் நடைபெறும் என்ற ரயில்வே வாரியத்தின் அறிவிப்பால் கொந்தளித்த மாணவர்கள், பீகார் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்கள் போராட்டம்

பாட்னா, நவடா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரயில் மறியலில் மாணவர்கள் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால் காவல்துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், மாணவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற மாணவர்கள், ரயில்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், இந்தியாவில் ஒவ்வொரு இளைஞருக்கும் தனது உரிமைக்காக போராட உரிமை வேண்டும். பிஹாரில் போராடும் மாணவர்களுக்கு நீதி வேண்டும். இதுவே குடியரசு" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE