டெல்லி குளிரில் ஒரே மாதத்தில் 145 பேர் உயிரிழப்பு?

By காமதேனு

குளிர்காலத்தில் டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர் வாட்டியெடுக்கும். மறுபுறம் டெல்லியில் கோடைக்காலத்தில் வெப்பமும் மிகக் கடுமையாக இருக்கும். வீடில்லாத ஏழைகள், நடைபாதை வசிப்பவர்கள் அதீத குளிரிலும், கடும் வெப்பத்திலும் படும் துயரங்கள் சொல்லி மாளாதவை. இதில் உயிரிழப்புகளும் நேர்வது உண்டு. இதைத் தடுக்கும் வகையில், நடைபாதையில் வசிப்பவர்கள் குளிர்காலத்தில் தங்குவதற்காக இரவு நேர தங்குமிடங்களும் திறக்கப்படுகின்றன. எனினும், தங்குமிடங்களில் உரிய வசதிகள் இல்லாமல் பலர் அவதிப்படுவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. தங்குமிடங்கள் கிடைக்காமல் குளிரில் நடுங்கியபடி குடும்பத்துடன் வீதியில் தங்கும் அவலத்தையும் பலர் எதிர்கொள்கின்றனர்.

149 பேர் மரணம்

டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் அதீத குளிரில் உயிரிழப்பவர்கள் குறித்த தகவல்களை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மையம் எனும் பெயரில் இயங்கிவரும் தொண்டு நிறுவனம் வெளியிடுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 19 வரை குளிர் தாங்காமல் 106 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஜனவரி 24-ல் இந்த எண்ணிக்கை 145 ஆக அதிகரித்திருப்பதாகவும் இந்தத் தொண்டு நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், இந்தத் தகவலை டெல்லி அரசு உறுதியாக மறுத்திருக்கிறது. “இது முற்றிலும் பொய்யான தகவல். நம்பகத்தன்மை இல்லாத இந்தத் தொண்டு நிறுவனம், திரிக்கப்பட்ட தரவுகளை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டுவருகிறது. டெல்லி அரசு முன்பைவிட அதிகமாக இந்த முறை தங்குமிட வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறது. காலையில் தேநீர், மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. மருத்துவக் குழு வாரம் இரு முறை அங்கு சென்று அங்கு தங்கியிருப்பவர்களின் உடல்நிலையைப் பரிசோதிக்கிறது. அவசர உதவியளிக்கும் குழுவும் எப்போதும் தயார் நிலையில் உள்ளது” என டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி பிபின் ராய் கூறியிருக்கிறார்.

எனினும், இந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் குமார் அல்டியா, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், “வீடில்லாதவர்கள் குளிர் காலத்திலும், கோடை காலத்திலும் டெல்லியின் வீதிகளில் உயிரிழக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இது குறித்த தரவுகளை அரசுக்கு வழங்கிவருகிறோம். இத்தனை பேர் உயிரிழக்க முக்கியக் காரணம் தங்குமிடங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததும், பல்வேறு குறைபாடுகள் நிலவுவதும்தான்” எனக் கூறியிருக்கிறார்.

கரோனா பரவல் காரணமாக, இரவு நேரத் தங்குமிடங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE