குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள்: ஒரு பார்வை!

By காமதேனு

இந்தியாவின் 73-வது குடியரசு தினம் இன்று (ஜன.26) கொண்டாடப்படுகிறது. 2021-ல், இந்தியாவின் 75-வது சுதந்திரதினம், ஆஸாதி கா அம்ரித் மஹோத்ஸவ்’ எனும் பெயரில் கொண்டாடப்பட்டது. அதையொட்டி இந்த ஆண்டின் குடியரசு தின விழாவும் அதே பெயரில் கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் இந்தியாவின் ராணுவ வலிமை, பன்முகத்தன்மை மற்றும் அரசின் பல்வேறு புதிய முன்னெடுப்புகளைப் பறைசாற்றும் வகையில் கண்கவர் அணிவகுப்புகள் இடம்பெறுகின்றன.

ஜனவரி 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததினம் ஆகும். இதையொட்டி, இந்த முறை 23-ம் தேதியே குடியரசு தினவிழாக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. இனி ஒவ்வொரு வருடமும் ஜனவரி 23 முதல் 30 வரை ஒரு வாரத்துக்குக் குடியரசு தினம் கொண்டாடப்படும். இன்று டெல்லியின் ராஜ்பத் பகுதியில் குடியரசு தின விழா அணிவகுப்புகள் நடைபெறுகின்றன. ஜனவரி 29-ல் விஜய் சவுக்கில் ‘பீட்டிங் தி ரீட்ரீட்’ எனும் பெயரில் இந்தியாவின் முப்படைகள் தங்கள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வு நடைபெறுகிறது. ஜனவரி 30-ல் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த முறை பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. 75 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ‘வந்தே மாதரம்’ எனும் பெயரில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட நடனப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 480 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வழக்கமாக காலை 10 மணிக்குத் தொடங்கும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள், பார்வையாளர்கள் துல்லியமாகக் கண்டுகளிக்கும் வகையில் இந்த முறை காலை 10.30-க்குத் தொடங்குகின்றன. பிரதமர் மோடி, தேசிய போர் நினைவுச்சின்னத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய பின்னர் அணிவகுப்புகள் தொடங்கும். தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர், 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்படும். தேசியக் கொடியைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றிவைப்பார். முப்படை அணிவகுப்பு மரியாதையைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வார். வீரதீரச் செயல்களுக்கான விருதுகளை வென்றவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

ராஜ்புத் ரெஜிமென்ட், அசாம் ரெஜிமென்ட், ஜம்மு - காஷ்மீர் லைட் ரெஜிமென்ட், சீக்கியர்கள் லைட் ரெஜிமென்ட், ராணுவத் தளவாடங்கள் பிரிவு, பாராசூட் ரெஜிமென்ட் ஆகிய 6 படைப் பிரிவுகள் அணிவகுப்பில் பங்கேற்கின்றன. மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர், மராத்தா லைட் ரெஜிமென்டல் சென்டர், 14 கூர்க்கா பயிற்சி மையம் உள்ளிட்ட படைப்பிரிவுகளின் இசைக்குழுக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கரோனா பெருந்தொற்றுக் காலம் என்பதால், இந்த முறை பார்வையாளர்களுக்கான இருக்கைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. பங்கேற்க விரும்புபவர்கள் ஆன்லைனில் பதிவுசெய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெரியவர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் ஆகியோருக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்படுகிறது. 15 வயதுக்குட்பட்டோருக்கு அனுமதி இல்லை.

’பீட்டிங் தி ரீட்ரீட்’ நிகழ்வின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 1,000 ட்ரோன்கள் பறக்கவிடப்படுகின்றன. இந்நிகழ்வைப் பார்வையிட ரிக்‌ஷா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE