“சரண்ஜீத் சிங் சன்னியே மீண்டும் பஞ்சாப் முதல்வராக வேண்டும்!”

By காமதேனு

பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தல், பிப்ரவரி 20-ல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், தற்போதைய முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியையே மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் தலைமை விரும்புவதாகத் தெரிகிறது.

இந்தச் சூழலில், அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்கிறார் பாலிவுட் நடிகரும் சமூக சேவகருமான சோனு சூட். மோகா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவரது தங்கை மாளவிகா சூட் போட்டியிடுகிறார். இந்நிலையில், தனது தங்கை மாளவிக்காக அத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சோனு சூட் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார்.

“கடந்த சில நாட்களில் சரண்ஜீத் சிங் சன்னி மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர் அற்புதமான மனிதர். முதல்வர் பணியில் அவருக்குக் குறைந்தகால அவகாசமே கிடைத்தது. மாற்றங்களை நிகழ்த்த, போதுமான கால அவகாசம் தேவை. எனினும், இந்தக் குறைந்த கால அவகாசத்திலேயே ஆர்வத்துடனும் உணர்வுபூர்வமாகவும் அவர் செயல்பட்டிருக்கிறார். எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்” என சோனு சூட் கூறினார்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கே வெற்றி கிடைக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சோனு சூட்டும், மாளவிகாவும் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார்கள் எனச் சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. பாஜகவில் இணையுமாறும் சோனு சூட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், அவர் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. அவரது தங்கை மாளவிகா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் சோனு சூட், “கட்சிகள் ஒரு விஷயம் அல்ல. தனிமனிதர்களின் சிந்தனை தான் சமூகத்திலும் நாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அர்விந்த் கேஜ்ரிவால் இன்றுவரை எனக்கு நெருக்கமானவராக இருக்கிறார். அதேபோல, ‘தேசத்துக்கான வழிகாட்டி’ எனும் பிராண்ட் அம்பாசடராகவும் நான் இன்றுவரை தொடர்கிறேன். பல கட்சிகள் என்னை அணுகின. எனினும், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மும்பையில் மருத்துவமனைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அரசியலுக்கு வர வேண்டும் என்றால் முழு மனதுடன் அதில் ஈடுபட வேண்டும். தற்போது நான் அதற்குத் தயாராக இல்லை” என என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE