அலிகர் மாவட்டத்தில் நுழைய 6 மாதம் தடை: காங்கிரஸ் வேட்பாளர் சல்மான் அதிர்ச்சி!

By ஆர். ஷபிமுன்னா

உத்தர பிரதேசம் அலிகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முகம்மது சல்மான் இம்தியாஸுக்கு, அலிகர் மாவட்டத்துக்குள் நுழைய ஆறு மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டது தொடர்பான வழக்குகளால் மாவட்ட நிர்வாகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவராக இருந்தவர் சல்மான் இம்தியாஸ். இவர் மத்திய அரசின் சிஏஏவிற்கு எதிராக 2019 டிசம்பரில் அலிகர் மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்திருந்தார். இதனால், சல்மான் மீது அலிகரின் சிவில் லைன் காவல் நிலையத்தில் ஒன்பது வழக்குகள் பதிவாகி இருந்தன. இதைத் தனது வேட்புமனு தாக்கலிலும் சல்மான் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று அலிகர் மாவட்ட உதவி ஆட்சியர் உத்தரவின் பேரில் சல்மான் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன்படி, சல்மான் அலிகர் மாவட்டத்திலிருந்து உடனடியாக வெளியேறிவிட வேண்டும். மாவட்ட நிர்வாக உத்தரவின்படி ஆறு மாதங்களுக்கு அலிகருக்குள் நுழையக் கூடாது. மீறி நுழைந்தால் அவர் கைது செய்யப்பட்டு அதற்கான புதிய வழக்குகளின் பிரிவுகளில் விசாரிக்கப்பட்டு கூடுதல் தண்டனை பெறுவார்.

அலிகர் மாவட்ட உதவி ஆட்சியர் ராகேஷ் குமார் உத்தரவின் பேரில் சல்மான் வீட்டின் கதவில் குண்டர் சட்ட உத்தரவு நேற்று ஒட்டப்பட்டது. இதை அறிந்த சல்மான் அதிர்ச்சியடைந்தார். உடனடியாகத் தனது செல்போனை ஸ்விட்ச்-ஆஃப் செய்துவிட்டு அலிகரைவிட்டு வெளியேறிவிட்டார். இந்தச் சட்டம் சல்மான் மீது உள்நோக்கத்துடன் போடப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அலிகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரான சந்தோஷ்சிங் ‘காமதேனு’ இணையத்திடம் கூறும்போது, “இதற்கு முன் கடந்த மார்ச் 2020-ல், ‘சல்மானை குண்டர் சட்டத்தில் ஏன் போடக் கூடாது?’ எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு முறையான பதிலை அலிகர் மாவட்ட நிர்வாகத்திற்கு சல்மான் அனுப்பியிருந்தார். இதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகிவிட்டது அரசு நிர்வாகம். இப்போது தாமதமாக, தேர்தல் சமயத்தில் எடுத்த தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையிடுவோம்” எனத் தெரிவித்தார்.

அலிகர் தொகுதி நிலவரம்

முஸ்லிம் மற்றும் இந்துக்கள் ஏறக்குறைய சரிநிகராக இருக்கும் தொகுதி அலிகர் நகரம். இந்தத் தொகுதியில் கடந்த 2017 -ல் பாஜகவின் சஞ்சீவ் ராஜா வென்றிருந்தார். இதற்கு எதிர்கட்சிகள் அனைவரும் முஸ்லிம் வேட்பாளர்களைப் போட்டியிட வைத்தது காரணமானது. அதேபோல், இந்த முறையும் சமாஜ்வாதி சார்பில் முன்னாள் மாநில அமைச்சரான ஜபர் ஆலம். போட்டியிடுகிறார். இவர் ‘லிங்க்’ எனும் பூட்டு நிறுவனத்தின் நிறுவனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ரஸியா கான் எனும் முஸ்லிம் பெண் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜக எம்எல்ஏவிற்கு 2 வருடத் தண்டனை

இந்தத் தேர்தலுக்கு முன்பாக எம்எல்ஏவான சஞ்சீவ் ராஜா மீதான அடிதடி வழக்கில், மாவட்ட நீதிமன்றம் இரண்டு வருடம் தண்டனை வழங்கியது. இதில் ஜாமீன் பெற்று மேல்முறையீடு செய்துள்ளார் சஞ்சீவ் ராஜா. இதனால், இந்த முறை பாஜகவின் வேட்பாளராக சஞ்சீவின் மனைவியான முக்தா ராஜா போட்டியிடுகிறார். மற்ற மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர்.

சிறையிலிருந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

இதனால், அலிகரில் பாஜக மீண்டும் வெல்வது கேள்விக்குறியாகி விட்டது. சல்மானுக்குத் தொகுதியில் நுழைய விதிக்கப்பட்ட தடையின் காரணமாக, சமாஜ்வாதி கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேசமயம், உத்தர பிரதேசத்தில் சிறையிலிருந்தபடி அரசியல் கட்சிகளுடன் சுயேச்சைகளும் தேர்தலில் வென்ற வரலாறு உண்டு. இதன் காரணமாக தொகுதியில் நுழையாவிட்டாலும் சல்மான் தேர்தலில் வெல்வார் என அலிகர் காங்கிரஸார் நம்பிக்கையில் உள்ளனர்.

உ.பி-யின் குண்டர் சட்டம் விவரம்

ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநில சட்டதிட்டங்களுக்கு ஏற்ற வகையில் குண்டர் சட்டம் அமலாக்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தைப் பொறுத்தவரை, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதில்லை. குற்றவழக்கில் சிக்குபவர்கள் மீதான விவரங்களை காவல் நிலையங்கள் தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு அளிப்பார்கள். இதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தால் சட்டம் ஒழுங்கைக் காக்கும் ஒரு தடுப்பு நடவடிக்கையாக உத்தர பிரதேசத்தில் அமலாக்கப்படுகிறது.

மேல்முறையீட்டிற்கு வாய்ப்பு

குண்டர் சட்டத்தில் சிக்கியவர்களை அவர்களது சொந்த மாவட்டத்தை விட்டு வெளியில் இருக்க உத்தரவிடப்படுகிறது. ஆறு மாதம் வரை வெளியில் இருக்க வேண்டிய காலத்தில் அந்த நபர் உள்ளே நுழைந்தால் நடவடிக்கைக்கு உள்ளாவர். குண்டர் சட்டத்தை மீறியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார். இதற்காகத் தனியாகவும் அவர் மீது குண்டர் சட்ட மீறல் வழக்குகள் பதிவாகும். சிறையில் இருப்பதை தவிர்க்கும் பொருட்டு குண்டர் சட்டத்தை மீறி எவரும் தங்கள் மாவட்டத்தில் நுழைய விரும்புவதில்லை. அதேசமயம், தன் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை எதிர்த்து அந்த நபர் உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE