பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் யார்?

By காமதேனு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக ஒரு சீக்கியர்தான் முன்னிறுத்தப்படுவார் என அரவிந்த் கேஜ்ரிவால் உறுதியாகக் கூறியிருந்தார். அந்த சீக்கியர் யார் எனும் சஸ்பென்ஸ் இன்று உடைந்திருக்கிறது. அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் பகவந்த் மான், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஜனவரி 13-ல் சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்விந்த் கேஜ்ரிவால், “பகவந்த் மான் என் அன்புக்குரியவர். அவர் என் தம்பியைப் போன்றவர். கட்சியின் உயர்ந்த தலைவர்” என்று நெகிழ்ந்து பேசினார். அப்போதே, அவரைத்தான் முதல்வர் வேட்பாளராகக் கேஜ்ரிவால் முன்னிறுத்துவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும், முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து பஞ்சாப் மக்கள் அலைபேசி மூலம் தங்கள் கருத்தைச் சொல்லலாம் என்று கூறி அதற்கான எண்ணையும் வெளியிட்டிருந்தார் கேஜ்ரிவால். நேற்று மாலை முதல் அந்த எண் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில், 93 சதவீதம் பேர் பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக, மொஹாலியில் உள்ள அரங்கில் இன்று நடந்த ஆம் ஆத்மி கட்சிக் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்.

ஸ்டாண்ட் அப் காமெடியனாகப் புகழ்பெற்றவரான பகவந்த் மான், 2011-ல் மன்ப்ரீத் சிங்கின் பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்ததன் மூலம், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2014-ல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சங்க்ரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2019 மக்களவைத் தேர்தலிலும் இதே தொகுதியில் அவருக்கு வெற்றி கிடைத்தது.

குடிகாரர் என்றும் சிலர் பகவந்த் மானை விமர்சிப்பதுண்டு. நாடாளுமன்றத்துக்கே மதுபோதையுடன் சென்றவர் அவர். தான் மது அருந்துவதை அவர் மறுத்ததில்லை. தான் ஒரு ‘சோஷியல் ட்ரிங்கர்’ என்றே குறிப்பிடுவார். எனினும், இந்த பிம்பம் அவருக்குப் பின்னடவைத் தரும் என்றே பேசப்பட்டது. 2019-ல், கட்சிக் கூட்டம் ஒன்றில், ‘இனி மதுவைத் தொடப்போவதில்லை’ என அறிவித்தார். சிறந்த பேச்சாளர். நாடாளுமன்றத்தில் சிறப்பான உரைகளை ஆற்றியிருக்கிறார்.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் இதுவரை பகவந்த் மானுக்கு வெற்றி கிட்டியதில்லை. 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் லெஹ்ரா தொகுதியில் பஞ்சாப் மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அதேபோல், 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆஆக சார்பில் அகாலி தளம் வேட்பாளரான சுக்பீர் சிங்கிடம் தோல்வியடைந்தார். இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை அரியணையில் ஏற்றுவாரா என மார்ச் 10-ல் தெரிந்துவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE