98 கோடீஸ்வரர்களிடம் 1% சொத்து வரி வசூலித்தால் இந்தியா உருப்படும்!

By சாதனா

கரோனா காலத்தில் கீழ்நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், இதே ஊழிக்காலத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் செல்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று பேச்சுவாக்கில் சொல்லப்பட்டது. தற்போது அது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டம் தொடங்கி இருக்கும் வேளையில் ’ஆக்ஸ்ஃபாம் இந்தியா’ நிறுவனம் இந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளது. ‘ஏற்றத்தாழ்வு’ குறித்து ஆண்டுதோறும் ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் வெளியிடும் ஆய்வறிக்கை நேற்று (17 ஜன) வெளியானது. இதில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கரோனா பெருந்தொற்று காலத்தில் மட்டும் 39 சதவீதத்தில் இருந்து 142 சதவீதமாக அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும் நாட்டின் முதல் பத்து பணக்காரர்களின் சொத்துக்களை மட்டுமே கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவுக்கு தேவையான கல்வியை நாட்டின் அத்தனை குழந்தைகளுக்கும் வழங்கிவிட முடியுமாம். சும்மா அல்ல அடுத்த 25 ஆண்டுகளுக்கு பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்விக்குத் தேவையான நிதியை 10 பேரிடம் வசூல் செய்தாலே போதுமாம்.

டாப் 10 இந்திய கோடீஸ்வரர்கள் தினமும் ரூ.7 கோடியே 42 லட்சம் செலவழித்தால்கூட அவர்களது சொத்து கரைய 84 ஆண்டுகள் பிடிக்கும்.

அது மட்டுமின்றி நாட்டின் பெரும்பணக்காரர்களில் 10 சதவீதத்தினரிடம் கூடுதலாக 1 சதவீதம் வரி வசூலித்தால் நாட்டுக்கு 17.7 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்களை தயார் செய்துவிடலாம். அதேபோல 98 கோடீஸ்வர்களிடம் சொத்து வரி என்பதாக அவர்களது சொத்தில் 1 சதவீதம் வசூலித்தால் மட்டும் போதும். அதை வைத்துக் கொண்டு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான நிதியை அடுத்த ஏழாண்டுகளுக்கு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் வழங்கிட முடியுமாம்.

கரோனா இரண்டாம் அலையின்போது ஆகிசஜன் சிலிண்டருக்காகவும் மருத்துவ காப்பீட்டுக்காகவும் லட்சக்கணக்கான மக்கள் பட்ட அவதியை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.

ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின்படி 142 இந்திய கோடீஸ்வரர்களிடம் மட்டும் 53 லட்சம் கோடி ரூபாய் சொத்து குவிந்துள்ளது. அவர்களில் 98 பேரின் கைவசம் 55.5 கோடி இந்தியர்கள் பயன்படுத்தும் வளங்கள் உள்ளது. டாப் 10 இந்திய கோடீஸ்வரர்கள் தினமும் ரூ.7 கோடியே 42 லட்சம் செலவழித்தால்கூட அவர்களது சொத்து கரைய 84 ஆண்டுகள் பிடிக்கும்.

கல்வி, மருத்துவம், சமூக பாதுகாப்புக்கு அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பற்றாகுறை ஏற்பட காரணமே கல்வியும் மருத்துவமும் தனியார்மயமாக்கப்பட்டதுதான் என்றும் ஆக்ஸ்ஃபாம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசு மருத்துவமனைகளின் போதாமையினால்தாம் கரோனா ஊழிக்காலத்தின் தாக்கத்தில் இருந்து சாமானிய மக்களால் எளிதில் மீள முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளது.

வருமானம் ஈட்டுவதற்கான வழிகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரி வசூலில் முற்போக்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு சொத்துக்குவிப்பில் ஈடுபடும் பெரும்பணக்காரர்களிடம் இருந்து வளங்களை மீட்டு மக்களுக்கு பொதுசேவையின் வழியாக பகிர்ந்தளித்து ஏற்றத்தாழ்வை குறைக்க வேண்டும். தனியார்மயத்தை தவிர்ப்பது சமத்துவத்தை நோக்கிய நகர்வில் முக்கிய படியாக இருக்கும் என்றும் ஆக்ஸ்ஃபாம் வலியுறுத்தியுள்ளது.

பாலின சமத்துவமின்மை குறித்த விவாதத்தில், பெருந்தொற்று காலத்தில் வேலையிழந்தவர்களில் 28 சதவீதத்தினர் பெண்கள் என்பதையும் தங்களுடைய வருமானத்தை மூன்றில் இரண்டு பங்கை பெண்கள் இழந்திருப்பதையும் ஆக்ஸ்ஃபாம் எடுத்துக்காட்டியுள்ளது.

நாட்டின் முதல் 100 கோடீஸ்வரர்களின் சொத்துகளை பறிமுதல் செய்தாலே போதும் அடுத்து 365 ஆண்டுகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவசியமான நிதியை வாரி வழங்க முடியும் என்று பகிரங்கமாகவே போட்டுடைத்துள்ளது ஆக்ஸ்ஃபாம்.

கல்வியில் நிலவும் பாகுபாட்டை ஒழிக்க அதே 98 கோடீஸ்வரர்களிடம் 1 சதவீதம் சொத்து வரி வசூலித்தால் மட்டும் போதும், மத்திய கல்வி அமைச்சகத்துக்கு உட்பட்ட பள்ளிக் கல்வித் துறைக்கான ஆண்டு செலவை நேர் செய்துவிடலாம். அதுவே 4 சதவீதம் வரி வசூலித்தால் அடுத்த 17 ஆண்டுகளுக்கு மதிய உணவுத் திட்டத்துக்கான நிதி, ஆங்கன்வாடி ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட கல்வியுடன் தொடர்புடைய பல செலவீனங்களுக்கான பணம் அரசு கஜானாவில் குவிந்துவிடும்.

மருத்துவம் மற்றும் ஆரோக்கியத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை களைய நாட்டில் கொழிக்கும் 98 பணக்காரக் குடும்பங்களுக்கு 4 சதவீதம் சொத்து வரி விதித்தால் போதும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துக்கு இரண்டாண்டுகளுக்குத் தேவைப்படும் நிதியை வசூலித்துவிடலாம். சொல்லப்போனால் அந்த 98 கோடீஸ்வர குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு இந்திய மத்திய பட்ஜெட்டை விடவும் 41 சதவீத கூடுதல் என்று அதிரடியான ஆய்வறிக்கையை ஆக்ஸ்ஃபாம் வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE