கரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கும் நிதி அளிக்குமா மத்திய அரசு?

By என்.சுவாமிநாதன்

கரோனா வைரஸ் தொற்று பொருளாதார நெருக்கடிகளை மட்டுமலாது, நம் மனதுக்கு நெருக்கமான பலரின் உயிரையும்கூட பறித்துக் கொண்டது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோரில் இருவரையுமோ அல்லது ஒருவரையோ இழந்துள்ளனர். அவர்களது வாழ்வை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய பொறுப்பு அரசு இயந்திரங்களுக்கு இருக்கிறது. ஆனால், அதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது, பெற்றோரை இழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையில் ஆயிரக்கணக்காணோர் உயிரிழந்தனர். 2-ம் அலையில் லட்சத்துக்கும் அதிகமான அளவுக்கு உயிரிழப்பு இருந்தது. இப்போது தடுப்பூசிகளின் வீரியத்தால் 3-வது அலையில் பெரிய உயிர்ச்சேதம் இல்லாதது ஆறுதல் அளிக்கும் விஷயம். கரோனா வைரஸ் தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நேசக்கரம் நீட்டும்வகையில், தமிழக அரசு பெற்றோரில் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சமும் நிவாரணைத் தொகையாக வழங்கியது. மேலும் குழந்தைகள்நலத் துறையின் சார்பில் அந்தக் குழந்தைகள் மிகச்சிறப்பான முறையில் பின் தொடரப்படுகிறார்கள். அதேபோல் மத்திய அரசும், கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 10 லட்ச ரூபாய் வைப்புத்தொகை செலுத்தப்படும் என அறிவித்து இருந்தது. ஆனால், அந்த வைப்புத் தொகை பெற்றோரில் இருவரையும் இழந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 பேருக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது கரோனாவால் பெற்றோரை இழந்தவர்களில் மாவட்ட அளவில் அரசு வசம் இருக்கும் மொத்தப் பட்டியலில் 10 சதவீதத்துக்கும் குறைவானதே! தமிழக அரசு பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் வழங்கியது. ஆனால் மத்திய அரசோ, அப்படியான குழந்தைகளுக்கு நிதி உதவியே வழங்கவில்லை. அதேபோல் பெரும்பாலான இல்லங்களில் தந்தை மட்டுமே பணி செய்பவர்களாக இருப்பார்கள். தாய் இல்லத்தரசியாகவே இருப்பார். கரோனாவால் தந்தையை இழந்தக் குழந்தைகளுக்கு இதனால் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் மத்திய அரசோ, அவர்களை பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையாக கணக்கில் கொண்டுவந்து உதவித்தொகை வழங்கவில்லை.

அதேநேரத்தில் தமிழக அரசோ, கரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கியபோதும்கூட கரோனாவால் பெற்றோரை இழந்த பட்டியலில் உதவித்தொகைப் பெற்ற குழந்தைகளின் குடும்பத்துக்கும் அந்த நிதியை வழங்கியது. மத்திய அரசோ பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தொடர்ந்து பாராமுகம் காட்டிவருகிறது. அவர்களுக்கும் பாதி அளவிலேனும் நிவாரணத் தொகை வழங்குவதே, வீழ்ந்துபோன அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைக்க வழிசெய்வதாக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE