உச்ச நீதிமன்றத்தில் இந்த ஆண்டு 8 நீதிபதிகள் ஓய்வு!

By காமதேனு

உச்ச நீதிமன்றத்தில், 2 தலைமை நீதிபதிகள் உட்பட 8 நீதிபதிகள் இந்த ஆண்டு ஓய்வுபெற இருக்கின்றனர். இதனால், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு ஏப்ரலில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா இந்த ஆண்டு ஆகஸ்டில் ஓய்வுபெறுகிறார். இதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் யுயூ லலித்தும் நவம்பர் வரை இப்பதவியில் நீடிப்பார். பின்னர், அவரும் ஓய்வுபெற்று புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்க உள்ளார். இவர், 2024-ம் ஆண்டு வரை இப்பதவியில் இருப்பார். 2024-ம் ஆண்டு நவம்பரில் சந்திரசூட் ஓய்வு பெறும்போது, உச்ச நீதிமன்றத்தில் பெரும்பாலான நீதிபதிகளும் ஓய்வுபெற்று இருப்பார்கள்.

கடந்த 4-ம் தேதி நீதிபதி சுபாஷ் ரெட்டி ஓய்வுபெற்றார். நீதிபதி வினித் சரண் மே 10-ம் தேதியும், நீதிபதி நாகேஸ்வர ராவ் ஜூன் 7, நீதிபதி கான்வீல்கர் ஜூலை 29, நீதிபதி இந்திரா பானர்ஜி செப்டம்பர் 23, நீதிபதி ஹேமந்த் குப்தா அக்டோபர் 16-ம் தேதியும் ஓய்வுபெற உள்ளனர். இதன் காரணமாக அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34-க்கு பதிலாக 25 ஆக குறைந்துவிடும்.

இதன் காரணமாக, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையும் உச்ச நீதிமன்றத்தில் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது. இவர்கள் விசாரித்து வரும் வழக்குகளிலும் தீர்வுகாண முடியாத நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குப் பிறகு இந்த வழக்குகளை வேறு நீதிபதிகள் விசாரிக்கும்போது, ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதன் காரணமாக, வழக்குகளுக்கு தீர்வு காண்பதிலும் தாமதம் ஏற்படும் நிலை உருவாகும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே 3 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிபதி சந்திரசூட்டின் தந்தையான யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். உச்ச நீதிமன்ற வரலாற்றில் தந்தையும், மகனும் தலைமை நீதிபதி பதவியை அலங்கரிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE