நீதி கிடைக்கும் வரை ராணுவத்துடனான ஒத்துழையாமை தொடரும்!

By காமதேனு

ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 14 பேருக்கு நீதி கிடைக்கும் வரை ராணுவத்துடனான ஒத்துழையாமை நிலைப்பாடு தொடரும் என நாகாலாந்து கோன்யாக் இனக் குழு அமைப்புகள் உறுதியுடன் தெரிவித்திருக்கின்றன. இது தொடர்பாக விடுத்திருந்த எச்சரிக்கைக்கான காலக்கெடுவையும் 10 நாட்களுக்கு அந்த அமைப்புகள் நீட்டித்திருக்கின்றன.

டிசம்பர் 4-ல், நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில், கிளர்ச்சியாளர்கள் எனத் தவறாகக் கருதி, அப்பாவிப் பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர்.

நாகாலாந்து மக்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, நாகாலாந்து காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டது. பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, டிசம்பர் 14 முதல் ராணுவத்தினருடன் ஒத்துழையாமை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக நாகா அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் ஜனவரி 14-ல் நடந்த கூட்டத்தில், கோன்யாக் சங்கம்(கே.யூ), கோன்யாக் நய்பூக் ஷேகோ காங் (கேஎன்எஸ்கே), கோன்யாக் மாணவர் சங்கம் (கேஎஸ்யூ) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாகாலாந்து காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை தாமதமாவது குறித்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

“கோன்யாக் மக்கள் விடுத்திருந்த 30 நாட்கள் எச்சரிக்கைக்கான காலக்கெடு ஜனவரி 15-ம் தேதி முதல் மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. பழங்குடிகள் அனைவரும், கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு (ஈஎன்பிஓ) அங்கீகரித்திருப்பதற்கு இணங்க, தேசிய நிகழ்வுகள் அனைத்திலிருந்தும் விலகி இருப்பார்கள்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE