மாசுபாடு பொறுப்பை தொழிலதிபர்களே ஏற்க வேண்டும்!

By ம.சுசித்ரா

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தை தமிழக அரசு முன்னெடுத்திருப்பது ஆரோக்கியமான விஷயம். இவ்வேளையில், சூழலியலுக்கு அதிபயங்கர கேடு விளைவித்துக் கொண்டிருக்கும் வேறொரு பொருள் குறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது.

’பழையன கழிதல் புதியன புகுதல்’ என்று சொல்லிக் கொண்டாடப்படும் போகிப் பண்டிகைக்கான அர்த்தம், பழைய மூடநம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களையும் கைவிடுதல் என்பதாகத் தமிழ்ச்சமூகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து, வீட்டிலிருக்கும் பழைய பொருட்களை எரியூட்டும் வழக்கம் இன்னமும் சில இடங்களில் வழக்கொழியாமல் இருக்கிறது. இதில், எரிக்கப்படும் பொருட்களில் பழைய டயர்கள் முக்கியமானவை. போகி நாளன்று மட்டுமல்ல... இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைப் பழுதுநீக்கும் பட்டறைகளில் தேங்கும் டயர் போன்ற கழிவுகள் தினமும் எரிக்கப்படுகின்றன. இதன் மூலம் எழும் நச்சு நிறைந்த ரசாயன கலவைக் கொண்ட புகையால் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. காற்றும் கணிக்க முடியாத அளவுக்கு மாசுபடுகிறது.

தினமும் 6.5 லட்சம் டயர்கள்

அங்கொன்றும் இங்கொன்றும் அப்புறப்படுத்தப்படும் டயர் கழிவால் என்னவாகிவிடப் போகிறது என்று உங்களுக்குத் தோன்றலாம். இவையெல்லாம், நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கும் தவறுகள். ஆனால், ரப்பர் தயாரிப்பில் உலகின் 3-வது இடத்திலிருக்கும் இந்தியாவில், நாளொன்றுக்கு 6.5 லட்சம் ரப்பர் டயர்கள் தயாரிக்கப்படுகின்றன. வாகனத் தொழில் துறை மென்மேலும் வளர்ந்துவரும் இந்தியாவில், 2035-ம் ஆண்டுக்குள் 8 கோடி மக்கள் சொந்தமாகக் கார் வைத்திருப்பார்கள்; 23 கோடியே 60 லட்சம் மக்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டிருப்பார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக, பேட்டரியில் இயங்கக்கூடிய பைக்குகளும் கார்களும் அடுத்த பத்தாண்டுகளில் பரவலாகிவிடும் என்றுகூட வைத்துக் கொள்வோம். ஆனால், இத்தனை வாகனங்களையும் சுமந்து செல்லவிருப்பவை ரப்பர் டயர்கள்தான். அதற்கு இதுவரை மாற்று கண்டுபிடிக்கப்படவில்லை.

மூடப்பட்ட 270 உருக்காலைகள்

இப்படி இருக்க, ஆண்டுதோறும் உலக அளவில் வெளியேற்றப்படும் 150 கோடி டன்னுக்கும் அதிகமான டயர் கழிவுகளில் 9 கோடி டன் அளவுக்கு இந்தியாவில் இருந்து மட்டும் வெளியேற்றப்படுகின்றது. இதுபோக, மறுசுழற்சி செய்வதற்காகவே இந்தியா வருடாவருடம் 3 லட்சம் டன் டயர்களை இறக்குமதி செய்கிறதாம். அதீத வெப்பத்தில் தெர்மோகெமிக்கல் முறையில் டயர்களை உருக்குவதன் மூலம், தொழிற்சாலைகளுக்கு பயன்படும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இதனால் அதிபயங்கர அளவில் காற்று மாசுபாடு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இயங்கிவந்த 270 டயர் உருக்காலைகளை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2019-ல் மூட உத்தரவிட்டது.

தயாரிப்பாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பொறுப்பு

இந்நிலையில், இந்தச் சிக்கலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் புதிய அறிவிப்பு கவனப்படுத்தி இருக்கிறது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்பட்ட புதிய வரைவு அறிவிப்பில், டயர் கழிவுகளை அப்புறப்படுத்த புதிய ஒழுங்குமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், ஆறுதல் என்னவென்றால், டயர் கழிவுகளை முறையாக வெளியேற்றும் பொறுப்பை டயர் தயாரிப்பாளர்களும் இறக்குமதியாளர்களும் ஏற்க வேண்டும் என்று இந்த வரைவு சுட்டிக்காட்டியுள்ளது. ’தயாரிப்பாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பொறுப்பு’ என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

நிதி ஆயோக், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், அகில இந்திய ரப்பர் மற்றும் டயர் சுழற்சிச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினர்களும் இதற்கான திட்ட வடிவமைப்புக் குழுவில் இடம்பெற்றனர். பழைய டயர்களை அப்புறப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வகுத்துக் கொடுக்கும் பொறுப்பை இந்தக் குழு ஏற்றது. அதன்படி இந்தக் குழுவினர், 2021 ஆகஸ்ட் மாதத்தில் நிதி ஆயோக்கிடம் தங்களது செயல்திட்டத்தை ஒப்படைத்தனர்.

100 சதவீத பாதுகாப்பு எப்போது?

இதன்படி, 2024-2025-ம் ஆண்டுக்குள் அனைத்து டயர் உற்பத்தியாளர்களும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத வகையில் 100 சதவீத பாதுகாப்புடன் செயல்பட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக 2022-ல், 35 சதவீத மறுசுழற்சி முறைக்குள் டயர் தயாரிப்பு நிறுவனங்கள் வந்துவிட வேண்டும். அடுத்த இரண்டாண்டுகளில் 75 சதவீதமாக அதை உயர்த்த வேண்டும். 2024-ல் 100 சதவீதமாக மாற்றிக்காட்ட வேண்டும். குறிப்பாக, தொழிற்சாலை பயன்பாட்டுக்கான எண்ணெய்யைத் தயாரிக்கப் பழைய டயர்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்துள்ளது இந்தக் குழு.

அனைத்து டயர் தயாரிப்பாளர்களும் இறக்குமதியாளர்களும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் தங்களது நிறுவனத்தை கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் ‘தயாரிப்பாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பொறுப்பு சான்றிதழ்’ பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் பெற்று முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது, சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவித்ததற்கான இழப்பீட்டை வசூல் செய்யவும் குழு சிபாரிசு செய்திருக்கிறது. இந்த வரைவுக்கு ஒப்புதல் கிடைத்ததும், 2022-23 நிதியாண்டு முதல் இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்.

தமிழக அரசு செய்யுமா?

தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தாங்களே பொறுப்பேற்றுக் கொள்வது எனப்படும் ‘தயாரிப்பாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பொறுப்பு’ என்ற திட்டம், வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் டயர் கழிவு மேலாண்மைக்கு முக்கிய இடம் அளித்து வருகிறது. பல வளர்ந்த நாடுகளில் மின்னணுக் குப்பைகளை அப்புறப்படுத்தும் பொறுப்பும் தயாரிப்பாளர்களையே சேரும். இந்தியாவிலும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி ‘தயாரிப்பாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பொறுப்பு’ திட்டம் 2016-லேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இன்றுவரை அது வெறும் திட்டமாகவே இருக்கிறது. அதனால் தான், திரும்பிய பக்கமெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள் நம்மை மிரட்டுகின்றன.

சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குப் பெரிதும் காரணமாக இருக்கும் தொழிற்சாலைகளின் தொழிலதிபர்கள், அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை டயர் விஷயத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது சரியான அணுகுமுறை. அதேபோன்று, கொஞ்சமும் பொறுப்பில்லாமல் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்து கோடிகளில் கொழிக்கும் தொழிலதிபர்களுக்கு கிடுக்கிப்பிடி போட, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை அரசு முழுவீச்சில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

சாமானிய மக்களுக்காக ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தை தொடங்கி இருக்கும் தமிழக முதல்வர், பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களுக்கும், ரப்பர் கழிவுகளை கட்டுப்படுத்தாத அதன் உற்பத்தி நிறுவனங்களுக்கும் கடிவாளம் போட்டால் நல்லது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE