சலீல் திரிபாதியின் மரணம்: வேலையிழப்பு அவலத்தின் ரத்த சாட்சியம்!

By வெ.சந்திரமோகன்

கரோனா பெருந்தொற்றின் பாதிப்பு என்பது நோய்த் தொற்று, மரணம் என்பதுடன் முடிந்துவிடுவதில்லை. பொதுமுடக்கத்தால் முடங்கிய நிறுவனங்களில் வேலைபார்த்து வந்தவர்கள், சம்பளக் குறைப்பு முதல் ஆட்குறைப்பு வரை பல இன்னல்களை எதிர்கொண்டதை மறந்துவிட முடியாது. அவர்களின் குடும்பங்கள் மளமளவென நிலைகுலைந்தன. தற்போது, சரிவுகளிலிருந்து மீண்டுவருகிறோம் என நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை அரசு சொல்லிவந்தாலும், இப்போதும் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. நட்சத்திர ஹோட்டல் மேலாளராகப் பணிபுரிந்து, ஸொமேட்டோ டெலிவரி பாயாக வேலைபார்க்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்ட 36 வயது சலீல் திரிபாதி, சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம், இந்த அவலத்தின் ரத்த சாட்சியமாகியிருக்கிறது!

பெருந்தொற்றால் நிலைகுலைந்த வாழ்வு

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரைச் சேர்ந்தவர் சலீல் திரிபாதி. 2000-ல் மீரட்டில் உள்ள ஜேபி ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் சேர்ந்தவருக்கு, படிப்பு முடிந்த கையோடு வேலை கிடைத்துவிட்டது. டெல்லியில் உள்ள ‘ஹட்ஸன் லேன்’ எனும் நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்துவந்தார். 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் ஓரளவு நிறைவான வாழ்க்கை. மனைவி, மகன் என அளவான குடும்பம். தந்தை ஜங் பகாதூர் திரிபாதி, ஓர் அச்சகத்தில் வேலைசெய்து வந்தார்.

நல்லியல்பு கொண்ட இளைஞராகவே வாழ்ந்துவந்த சலீல், தன் சம்பாத்தியப் பணம் அனைத்தையும் தன் குடும்பத்துக்கு மட்டும் செலவழிப்பது என்றில்லாமல், ஊரில் இருக்கும் உறவினர்களுக்கும் உதவிவந்தார். நீண்ட நேரம் வேலைபார்க்க நேர்ந்தாலும் அதுகுறித்த புகார்கள் இன்றி, புன்னகையுடன் தனது கடமையைச் செய்துவந்தவர் என அவருடன் வேலைபார்த்தவர்கள் நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.

ஆனால், சலீலின் நிம்மதியான வாழ்வு நிலைக்கவில்லை. 2020 தொடக்கத்தில் கரோனா பரவல், பொதுமுடக்கம் என உலகம் எதிர்கொண்ட அதே சிக்கல்கள் இந்தியாவிலும் எதிரொலித்தன. மார்ச் மாதம், முதல் அலையின்போது போடப்பட்ட பொதுமுடக்கம் எத்தனையோ குடும்பங்களின் வருவாயில் இடியாக இறங்கியது. அதில் சலீலின் குடும்பமும் ஒன்று. அவரது வேலை பறிபோனது. பார்த்த வேலைக்குச் சம்பளத்தைக்கூட ஹோட்டல் நிர்வாகம் அளிக்கவில்லை. கையிருப்பில் இருந்த சேமிப்பும் கரைந்துகொண்டே வந்தது. எனினும், எளிதில் விட்டுக்கொடுக்காத தன்மை கொண்ட சலீல், வேறு வேலை தேடத் தொடங்கினார். ஒரு கஃபே உணவகத்தில் வேலை கிடைத்தது. முன்பைவிட குறைவான சம்பளம்தான். எனினும் சமாளித்து வந்தார். ஆனால் 2021-ல், இரண்டாவது அலை இந்தியாவைப் புரட்டியெடுத்தபோது சலீலின் நிலைமை மேலும் மோசமானது. அவரது தந்தை ஜங் பகாதூர், கரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தார்.

இனி வேறு வழியே இல்லை எனும்போது, ஸொமேட்டோ நிறுவனத்தில் உணவு விநியோகப் பணியாளராக வேலை பார்க்கத் தொடங்கினார் சலீல். மாதம் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரைதான் சம்பளம் கிடைத்துவந்தது. எனினும், சலீல் மனம் தளரவில்லை. நிலைமை என்றாவது ஒருநாள் சீராகும் என நம்பினார். கூடவே வேறு சில வேலைகளும் செய்து வருவாயைக் கொஞ்சமேனும் அதிகரிக்கும் முயற்சியில் இருந்தார். கடைசியில் ஒரு காவலரின் பொறுப்பற்ற செயல், அவரது உயிரைப் பறித்துவிட்டதுதான் எதிர்பாராத துயரம்!

போதை போலீஸ் ஏற்படுத்திய விபத்து

ஜனவரி 8-ம் தேதி இரவு, டெல்லியின் ரோஹிணி பகுதியில் பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு அருகே உணவு டெலிவரிக்காக, சர்வீஸ் சாலையில் தனது பைக்கை நிறுத்திவிட்டு காத்திருந்தார் சலீல். அருகில் உள்ள உணவகத்திலிருந்து உணவைச் சேகரித்துவிட்டு பைக்கின் மீது அமர்ந்திருந்தார் என்கிறார்கள் சிலர். எது எப்படியோ, தனக்கு நேரப்போகும் ஆபத்தை உணர்ந்திராத அந்த இளைஞர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை.

அப்போது ஜிலே சிங் எனும் காவலர் ஓட்டிவந்த வாகனம் (எஸ்.யூ.வி கார்), கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து சர்வீஸ் சாலைக்குப் பாய்ந்தது. கார் சலீல் மீது மோதியதில் அவர் 15 அடி தூரத்துக்குத் தூக்கிவீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் அம்பேத்கர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அவரது உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்றபோது சலீலின் சடலத்தை மட்டுமே பார்க்க முடிந்தது.

இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்தியிருந்த காவலர் ஜிலே சிங், மது போதையில் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பதிவுசெய்திருக்கின்றனர். சலீல் மீது மோதியதுடன் நிற்காமல் சென்ற கார், அரசுப் பேருந்தின் மீதும் மோதி நின்றது. போதையில் உளறியபடி காரின் ஓட்டுநர் இருக்கையில் ஜிலே சிங் அமர்ந்திருந்த காட்சிகள் அடங்கிய காணொலிகள் வைரலாகின. கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்புக் காரணமாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம் 279 மற்றும் 304 ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு ஜிலே சிங் கைதுசெய்யப்பட்டார். எனினும் கைதுசெய்யப்பட்ட வேகத்தில் அவர் ஜாமீனில் வெளிவந்துவிட்டார். சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், சீருடையில் இருந்த ஜிலே சிங்குக்கு மாற்று உடை தந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மறுபுறம், சலீலின் குடும்பமோ ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்தது.

கலங்கவைத்த கடிதம்

பல்லாயிரக்கணக்கான விபத்து மரணங்களில் ஒன்றாகக் கடந்துசெல்லப்பட்டிருக்கக்கூடிய சலீலின் மரணம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்த முக்கியக் காரணம், அவரது மகன் திவ்யாஷ் திரிபாதி எழுதிய கடிதம். அதில், ‘என் தந்தையின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். போதையில் கார் ஓட்டிய போலீஸ்காரர் என் தந்தை மீது மோதிவிட்டார். ஹோட்டலில் மேலாளராகப் பணியாற்றி வந்த என் தந்தை, கோவிட் பெருந்தொற்றின் காரணமாக ஸொமேட்டோ உணவு விநியோக வேலை பார்த்துவந்தார். எங்கள் குடும்பத்துக்கு நீதி கிடைக்க உதவுங்கள்’ என எழுதியிருந்த அந்தச் சிறுவன், கடிதத்தின் இறுதியில் ‘மிஸ் யூ அப்பா’ என குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் பலரைக் கலங்கச் செய்துவிட்டன.

சலீலின் மனைவி சுசிதாவும் ட்விட்டரில் தனது வேதனையைப் பதிவுசெய்திருந்தார். “இனி நான் என்ன செய்வேன்? என் மாமியாரையும் மகனையும் எப்படிப் பார்த்துக்கொள்வேன்? அரசு எனக்கு உதவ வேண்டும்” என்று அவர் கண்கலங்கியபடி பேசியது நியூஸ் சேனல்களில் வெளியானது.

மணீஷ் முந்த்ரா

இதையடுத்து, அந்தக் குடும்பத்துக்கு உதவிக்கரங்கள் நீளத் தொடங்கின. பாலிவுட் தயாரிப்பாளர் மணீஷ் முந்த்ரா, சலீலின் மனைவி சுசிதாவின் வங்கிக் கணக்கில் 4 லட்ச ரூபாய் செலுத்தினார். அந்தத் தகவலை ட்வீட் மூலம் தெரிவித்த மணீஷ், சுசிதாவின் வங்கிக்கணக்கு விவரங்களையும் வெளியிட்டிருந்தார். அவரைப் போலவே பலரும் சலீலின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிவருகிறார்கள். அவரது மகனின் கல்விச் செலவையும் ஏற்க சிலர் முன்வந்திருக்கின்றனர்

தவிக்கும் குடும்பங்கள்

ஸொமேட்டோ நிறுவனமும் சலீல் திரிபாதியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாயை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அவரது மனைவிக்கு வேலை வழங்கவும் அந்நிறுவனம் முன்வந்திருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் நீண்டுவரும் உதவிக்கரங்கள் அக்குடும்பத்துக்குப் பெரும் ஆறுதல் அளித்திருக்கின்றன. இந்த உதவிகள் முறையாகச் சென்று சேர்ந்தால், சரிவிலிருந்து சலீலின் குடும்பம் மீண்டு வந்துவிட முடியும். ஆனால், சலீலைப் போல கோடிக்கணக்கானோரின் துயரத்துக்கு எப்போது முடிவுகட்டப்படும் என்பதுதான் முக்கியமான கேள்வி.

ஆம்! பெருந்தொற்றுக்கால வேலையிழப்புகளின் கொடூரம் நாம் அறிந்திராத இருள் பக்கங்களால் நிரம்பியது. பெரிய நிறுவனங்கள் நடத்தும் உணவகங்களே தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்பட்டுவிட்டன. உணவகத் துறையில் மட்டும் 2.5 கோடிப் பேர் வேலை இழந்திருக்கின்றனர். இதுதவிர, வேலை கிடைக்காத இளைஞர்கள் பலர், தங்கள் கல்வித் தகுதி, இதுவரை பார்த்துவந்த வேலை என எல்லாவற்றையும் தற்காலிகமாகவேனும் நினைவிலிருந்து அகற்றிவிட்டு, உணவு விநியோகப் பணி வழங்கும் நிறுவனங்களை நாடுகின்றனர். பெருந்தொற்றுக் காலத்தில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் சம்பாதித்துவந்த அழகுக் கலைத் துறையைச் சேர்ந்த பெண்களில் பலர் வேலையிழந்திருக்கின்றனர். பலருக்குச் சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. பணக்காரர்கள் மேலும் செல்வம் சேர்த்துக்கொண்டிருக்க, மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பியிருந்த குடும்பங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. கூலித் தொழிலாளர்களின் நிலையைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

2020 டிசம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவில் 1.5 கோடி பேர் நிரந்தரமாக வேலை இழந்திருக்கின்றனர் என்கிறது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கை. 2020 பொதுமுடக்கத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், 15 முதல் 23 வயது வரையிலான தொழிலாளர்கள்தான் என அப்பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் (சிஎம்ஐஇ) எனும் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

2020-ம் ஆண்டிலும் 2021-ம் ஆண்டின் பெரும் பகுதியிலும் வேலைவாய்ப்பின்மை 7 சதவீதமாக இருந்த நிலையில், நிலைமை மோசமாகிவருவதையே டிசம்பர் மாத நிலவரம் உணர்த்துகிறது. வங்கதேசம், மெக்ஸிகோ, வியட்நாம் என வளர்ந்துவரும் பிற நாடுகளைவிட இந்தியாவின் நிலைமை மோசம் என்பதையே சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதோ 3-வது அலையும் தொடங்கிவிட்டது. ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு, கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருவது, மீண்டும் சவால்களை உருவாக்கியிருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஞாயிறு முழு அடைப்பு தொடங்கி இரவு நேர ஊரடங்கு வரை பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.

சலீலின் குடும்பத்தைப்போல இன்னும் எத்தனைக் குடும்பங்கள் இருளில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனவோ?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE