தொடர்ந்து 3-வது முறையாக அருணாச்சல பிரதேச முதல்வராக பதவி ஏற்றார் பெமா காண்டு

By KU BUREAU

இடா நகர்: அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு நேற்று 3-வது முறையாக பதவியேற்றார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜக மொத்தம் உள்ள60 தொகுதிகளில் 46 தொகுதிகளில் வென்றது. இதையடுத்து அருணாச்சலப் பிரதேச முதல்வராக பெமா காண்டு நேற்று 3-வதுமுறையாக பதவியேற்றார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வடகிழக்கு பகுதியில் மத்திய அரசு மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் காரணமாக பாஜக அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். முதல் 100 நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிதிட்டத்தை எனது முதல் அமைச்சரவை உருவாக்கும். அருணாச்சலப் பிரேதசத்தில் 26 பழங்குடியினர் பிரிவும், 100-க்கும் மேற்பட்ட துணை பிரிவுகளும் உள்ளன. அனைவரது நலனுக்காகவும், அருணாச்சலப் பிரதேசத்தை வளர்ச்சியடைச் செய்யவும், புதிய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். அரசுடன் ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற மக்கள் முன்வர வேண்டும்.

அருணாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி தனிக் கவனம் செலுத்துகிறார். அமைச்சரவையில் பெண் அமைச்சர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். அதனால் அடுத்த 2029-ம் ஆண்டு தேர்தலில் பல பெண்கள் போட்டியிட தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு பெமா காண்டு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE