உத்தராகண்ட் தேர்தல்: ஹரீஷ் ராவத் போட்டியிடுவாரா?

By காமதேனு

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட உத்தராகண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. மார்ச் 10-ல் முடிவுகள் வெளியிடப்படவிருக்கின்றன. இந்நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் கூட்டம் நேற்று (ஜன.13) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், உத்தராகண்ட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கணேஷ் கோதியால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாக 10 மணி நேரம் நீண்ட இந்தக் கூட்டம் இரவு 11.15 மணிக்குத்தான் முடிவடைந்தது. இதில் பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஹரீஷ் ராவத், “50 தொகுதிகள் குறித்து பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். வெள்ளிக்கிழமை இதுகுறித்து முடிவெடுப்போம். காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்வுக் குழுவின் கூட்டம் சனிக்கிழமை நடக்கும்” என்றார்.

இந்தத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் என்றும அவர் கூறினார்.

சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஹரீஷ் ராவத், கடந்த மாதம் எழுப்பிய அதிருப்திக் குரல் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து வெளியிட்ட மூன்று ட்வீட்டுகள், கட்சிக்குள் அவருக்கு எதிராக நடக்கும் காய்நகர்த்தல்களை வெளிக்கொணர்ந்தன. கூடவே, “நான் பலவீனமானவனும் அல்ல; சவால்களைக் கண்டு பயந்து ஓடுபவனும் அல்ல எனும் குரல் எனக்குள் ஒலிக்கிறது. நான் கொந்தளிப்பில் இருக்கிறேன். புத்தாண்டு எனக்கு ஒரு பாதையைக் காட்டும் என்று நம்புகிறேன். கடவுள் கேதர்நாத் சிவன் எனக்கு வழிகாட்டுவார்” என்றும் அவர் ட்வீட் செய்திருந்தார்.

கட்சியின் மாநிலத் தலைவர் கணேஷ் கோதியால், பாஜகவிலிருந்து காங்கிரஸுக்கு வந்த யஷ்பால் ஆர்யா, மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ், எதிர்க்கட்சித் தலைவர் ப்ரீத்தம் சிங் எனக் கட்சிக்குள்ளேயே ஹரீஷ் ராவத்துக்குப் பலருடன் பிணக்கு நிலவுகிறது. தேர்தல் பணிகளில் தனக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் அதிருப்தியில் இருந்தார். பின்னர் கட்சித் தலைமை அவரையும் பிற தலைவர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE