போக்சோ வழக்கில் சிக்கிய எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளியில் வர முடியாத பிடிவாரண்ட்

By KU BUREAU

பெங்களூரு: கர்நாடக‌ முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் 17 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தனது தாயுடன் சந்தித்தார். அப்போது சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்ற எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின்தாயார் (54 வயது), சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை விசாரித்த போலீஸார், மார்ச் 14-ம் தேதி எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் 354 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த மே 25-ம் தேதி புகார்தாரர் திடீரென தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் (சிஐடி) ஜூன் 12-ம் தேதி போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு ச‌ம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதுதொடர்பாக சிஐடி போலீஸ் தரப்பில் பெங்களூரு மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது போலீஸ் தரப்பில் கூறும்போது, "எடியூரப்பா மீதான வழக்கில் ஜூன் 14-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்'' என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம், எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தது.இந்த உத்தரவால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE