பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யாவுக்கு பிடிவாரன்ட்!

By காமதேனு

சமாஜ்வாதி கட்சியில் இணைந்ததாகத் தகவல் வெளியான நிலையில், பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யாவுக்கு உபி நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா, தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தது மாநில பாஜகவை அதிர்ச்சியடைய வைத்தது. சமாஜ்வாதி கட்சியில் அவர் இணைந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

சுவாமி பிரசாத் மவுர்யா கடந்த 2014-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, “திருமண நிகழ்ச்சிகளில் விநாயகரையும், கவுரியையும் வணங்கக் கூடாது. இது ஆதிக்க சாதியினர் தலித்துகளை அடிமைப்படுத்த ஏற்படுத்தி வைத்த நடவடிக்கை” என்று கூறியிருந்தார். இவரது இந்த சர்ச்சைப் பேச்சை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உபி நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதை எதிர்த்து சுவாமி பிரசாத் மவுர்யா தொடர்ந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், பிரவாரன்ட் மீது இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், ஜனவரி 12-ம் தேதி நேரில் ஆஜராக சுவாமி பிரசாத் மவுர்யாவுக்கு சுல்தான்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பேசிய சுவாமி பிரசாத் மவுர்யா, “அமைச்சர் பதவியைத்தான் ராஜினாமா செய்துள்ளேன். விரைவில் பாஜகவில் இருந்து விலகுவேன். வரும் 14-ம் தேதி (நாளை) வரை காத்திருங்கள். மிகப்பெரிய அறிவிப்பு வரும். பாஜகவில் இருந்து மேலும் பலர் வெளியே வருவார்கள்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE