அடுத்தடுத்து 3 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா!

By காமதேனு

உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் 3 பாஜக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளது ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுர்யா நேற்று ராஜினாமா செய்ததோடு, பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து அக்கட்சியில் இணைந்து கொண்டார்.

அடுத்த மாதம் உபி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜக அமைச்சர் ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மேலும் 3 பாஜக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். தின்ட்வாரி தொகுதி எம்எல்ஏ பிரஜேஷ் பிரஜாபதி, தில்கார் தொகுதி எம்எல்ஏ ரோஷன் லால் வர்மா, பிலாகர் தொகுதி பகவதி பிரசாத் சாகர் ஆகியோரும் பிரசாத் மவுர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

மோடி- அமித்ஷா

“அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா எதற்காக பதவி விலகினார் என்பது தெரியாது. அவர் ஒருமுறை பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் பல நேரங்களில் தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன” என துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா கூறியுள்ளார்.

உபியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் உத்வேகத்தில் உள்ள பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் யோகிக்கு இந்த நிகழ்வு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE