சித்தார்த் மீது வழக்குப் பதிவு; தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை

By காமதேனு

‘பேட்மின்டன் வீராங்கனையை விமர்சித்த நடிகர் சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று, தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

நடிகர் சித்தார்த் அவ்வப்போது ட்விட்டரில் கருத்து தெரிவிப்பது வழக்கம். மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் அவர் விமர்சித்த விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. கடந்த அதிமுக அரசையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சென்ற பிரதமரின் பாதுகாப்பு, கடந்த வாரம் கேள்விக்குறியானதை அடுத்து சர்ச்சையானது. பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றில் வந்தபோது, போராட்டக்காரர்களால் சாலை மறிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் சுமார் 20 நிமிடம் பிரதமரின் வாகனம் மேம்பாலத்தில் நின்றிருந்தது. பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சித்தார்த்

இதுபற்றி ட்விட்டரில் குறிப்பிட்டிருந்த, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், ‘'எந்த நாடும் தனது சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொண்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாகக் கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளால் கண்டிக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

சித்தார்த், சாய்னா நேவால்

அதை ரீ-ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் கூறியிருந்த பதில், பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சித்தார்த்தின் கருத்து ஆபாசமாக இருப்பதாகப் பாடகி சின்மயி உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா, பெண்களை அவமானப்படுத்தும் வகையில் வெறுப்பு ட்வீட் செய்ததற்காக நடிகர் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான கருத்துகளை வெளியிடுதல்) ஆகியவற்றின்கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு மகாராஷ்டிர டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கை முடக்குமாறு ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த், ‘தான் அவமரியாதையாக எதையும் சொல்லவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE