நாடு முழுவதும் இன்று முதல் பூஸ்டர் டோஸ்!

By காமதேனு

கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதும், இன்று (ஜன.10) முதல் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.

ஆதார் அட்டையை மட்டும் காட்டி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம். முதல் இரண்டு தவணைகளில் செலுத்திக்கொண்ட அதே தடுப்பூசிதான் பூஸ்டர் டோஸாகச் செலுத்தப்படும்.

9 மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம். அதன்படி, 2021 மே 3-ம் தேதிக்குள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் பெறத் தகுதியானவர்கள் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.

45 சுகாதார மாவட்டங்களில் 2.74 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள், 2.77 லட்சம் முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ் போடப்படும். அதேபோல், 60 வயதுக்கு மேற்பட்ட 5.23 லட்சம் பேர் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்.

சென்னை எம்சிஆர் நகரில் உள்ள இமேஜ் கலையரங்கில் இந்தத் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்குத் தொடங்கிவைக்கிறார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதில் பங்கேற்கிறார். இன்று 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் அதிக சிகிச்சை முறைகளைச் சேர்த்தல் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவாக்கம் தொடக்க விழாவும் இமேஜ் கலையரங்கில் இன்று நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE