5 மாநில தேர்தலில் ஜன.15 வரை பிரச்சாரக் கூட்டங்களுக்குத் தடை

By ஆர். ஷபிமுன்னா

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் இம்முறை புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், ஜன.15 வரை பிரச்சாரக் கூட்டங்களுக்கு தடை உள்ளிட்டவற்றை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதற்கு முன்பாக இந்தத் தேர்தலில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜன.15 வரை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரவு 8.00 முதல் மறுநாள் காலை 8.00 மணிவரையும் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்குப் பின்பாக வெற்றிக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் அமர்த்தப்படும் அலுவலர்கள் 2 தடுப்பூசிகளை செலுத்தியிருப்பதும் அவசியமாக்கப்பட்டு உள்ளது. இவர்கள் முன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதையும் தேர்தல் ஆணையம் ஊக்கப்படுத்தியுள்ளது.

கடந்தமுறை கரோனா பரவல் காலங்களில் நடைபெற்ற தேர்தலில், ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 பேர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதில், மாற்றம் செய்யப்பட்டு இம்முறை 1,250 வாக்காளர்கள் மட்டுமே ஒரு வாக்குச்சாவடிக்கு அனுமதிக்கப்படுவர்.

குற்ற வழக்குகளில் சிக்கிய வேட்பாளர்களுக்காகவும் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தம் மீதுள்ள வழக்குகள் குறித்து குறிப்பிட வேண்டும் என ஏற்கெனவே வழிமுறை உள்ளது. இதில், தன் மீதானக் குற்றவழக்குகளை வெளியிடும் வேட்பாளர்கள் அன்றி, அவர்களது அரசியல் கட்சிகளும் பத்திரிகை விளம்பரங்கள் அளித்து அவர்கள் மீதுள்ள வழக்குகளின் பிரிவுகளையும் தெளிவாகக் குறிப்பிடுதல் அவசியமாக்கப்பட்டுள்ளது.

மூத்த வயதுள்ள மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கானப் புதிய முறையில், அவர்கள் தம் வீடுகளில் இருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும். இந்த வசதிகள் பிஹார் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைமுறைக்கு வருகிறது. முதன்முறையாகப் பெண் வாக்காளர்களை ஊக்குவிக்க, அனைத்துப் பெண் அலுவலர்கள் அமைந்த 800 வாக்குச்சாவடிகள் உபியில் அமைக்கப்பட உள்ளன.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க வேண்டி, முதன்முறையாக உபியின் லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இணையதளம் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கரோனா பரவலின் காரணமாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு நேரங்களும் ஒரு மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட உள்ளன.

உபியில் மட்டும் இந்தத் தேர்தலில் புதிதாக 52.8 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23.9 லட்சம் ஆண்கள், 28.8 லட்சம் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 19.89 லட்சம் பேர் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். உபியில் முதன்முறையாக ஆண்களை விடப் பெண் வாக்காளர்கள் 5 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளில் 10,64,267 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தல்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் வாக்குகள் பதிவான பகுதிகளில், வீடுதோறும் சென்று இந்தமுறை தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.

இந்த 5 மாநிலத் தேர்தலானது 7 கட்ட வாக்குப்பதிவுகளாக நடத்தப்பட உள்ளது. அதில், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மாநிலங்களில் ஒரே கட்ட வாக்குப்பதிவாக பிப்.10-ம் தேதியும், மணிப்பூரில் 2 கட்ட வாக்குப்பதிவாக பிப்.27, மார்ச் 3-ம் தேதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் பிப்.10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 தேதிகளில் 7 கட்ட வாக்குப்பதிவாக தேர்தல் நடைபெற உள்ளதாக ஆணையம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE