நாட்டின் பிரதமர் பொறுப்புடன் பேச வேண்டும்: பஞ்சாப் விவகாரத்தில் விவசாயிகள் பதிலடி!

By காமதேனு

பஞ்சாப் மாநிலத்தில், 42,750 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க, ஜனவரி 5-ல் ஃபெரோஸ்பூர் சென்றிருந்த பிரதமர் மோடி, தியாகிகள் நினைவிடத்துக்குச் சாலைமார்க்கமாகச் சென்றபோது விவசாய சங்கமான, பாரதிய கிஸான் சங்கம் (கிராந்திகாரி) அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் 20 நிமிடங்கள் மேம்பாலத்தில் காரிலேயே காத்திருக்க நேர்ந்தது. இதையடுத்து, அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டன.

இவ்விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸும் ஒன்றையொன்று விமர்சித்துவருகின்றன. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு ஏற்பட்டதற்குப் பஞ்சாப் காங்கிரஸ் அரசே காரணம் என பாஜக குற்றம்சாட்டிவருகிறது. ஆனால், பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சியில் போதுமான கூட்டம் சேரவில்லை என்பதால், நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டதாகவும், பிரதமரின் பயணத் திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, “பதிண்டா விமான நிலையத்துக்கு உயிருடன் திரும்பி வந்துவிட்டேன் என உங்கள் முதல்வரிடம் நன்றி தெரிவித்துவிடுங்கள்” என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் மோர்ச்சா இதைக் கண்டித்திருக்கிறது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சம்யுக்த கிஸான் மோர்ச்சா, “பிரதமர் மோடி தனது பொதுக்கூட்டம் தோல்வியடைந்திருப்பதை மறைப்பதற்காக, ‘ஒருவாறாகத் தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்டதாக’ சாக்கு சொல்லும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதன் மூலம், பஞ்சாப் மாநிலத்தையும், விவசாய இயக்கங்களையும் மலினப்படுத்த முயற்சிக்கிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

அத்துடன், “அஜய் மிஸ்ரா போன்ற மத்திய அமைச்சர்களால் விவசாயிகளின் உயிருக்குத்தான் ஆபத்து என்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரியும். நாட்டின் பிரதமர், தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மனதில் கொண்டு, இப்படியான பொறுப்பற்ற அறிக்கைகளை விடக்கூடாது என ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் எதிர்பார்க்கிறது” என அந்த அறிக்கையில் விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அன்றைய தினம், பிரதமருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள், அவரது வாகன அணிவகுப்பை நோக்கிச் செல்ல முயற்சிக்கவில்லை என்றும், பாஜக கொடியை ஏந்திக்கொண்டு ‘நரேந்திர மோடி வாழ்க’ எனும் முழக்கத்துடன் சென்ற ஒரு குழுதான் பிரதமரின் வாகன அணிவகுப்புக்கு அருகே சென்றது என்று கூறியிருக்கும் சம்யுக்த கிஸான் மோர்ச்சா, “எனவே, பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்பது முற்றிலும் இட்டுக்கட்டப்பட்டது” என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE