ஹைதராபாதில் அதிகரித்திருக்கும் திருமணங்கள்: பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் மசோதாவின் விளைவா?

By ஆர்.என்.சர்மா

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதிலும் வேறு சில நகரங்களிலும் இஸ்லாமியர்கள் தங்களுடைய மகள்களுக்கு வேகவேகமாக வரன் பார்த்து முடித்து திருமணம் செய்து வைக்கின்றனர். அன்றாடம் நூற்றுக்கணக்கில் திருமணங்கள் நடக்கின்றன. பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு மசோதா கொண்டுவந்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது இப்போது நாடாளுமன்ற பொறுக்குக் குழுவின் (Select Committee) பரிசீலனைக்கு விடப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தங்களுடைய பெண்களுக்கு அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைக்கின்றனர்.

இது இஸ்லாமியக் குடும்பங்களில் மட்டுமே நடக்கிறது என்று எண்ண வேண்டாம். இந்துக் குடும்பங்கள் மார்கழி மாதத்தை பீடுடைய மாதம் என்று கருதுவதால் இந்த மாதம் முடியும் வரையில் இறை வழிபாட்டுக்கே முக்கியத்துவம் தருவார்கள். தை பிறந்தால்தான் தெரியும் இந்துக்களிடமும் இந்த அவசரமும் அச்சமும் இருக்கிறதா என்பது. இந்த மசோதா மட்டுமல்ல கோவிட்-19 பெருந்தொற்று மீண்டும் அடுத்த சுற்று பரவுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

“நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணிக்குப் பெரும்பான்மை இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இது நிறைவேற்றப்படலாம், அவசரச் சட்டம்கூட கொண்டுவருவார்கள்” என்று சிலர் அச்சமூட்டுவதால் திருமணம் செய்து வைக்க விரைகின்றனர். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது அடுத்த ஆண்டில் திருமணம் செய்ய நிச்சயம் செய்தவர்கள்கூட திருமணத்தை விரைந்து முடிக்கின்றனர். சட்டம் இயற்றப்பட்டுவிட்டால், மேலும் மூன்று ஆண்டுகள் திருமணத்துக்காகக் காத்திருக்க வேண்டும் என்பதால் இப்படி அவசரப்படுவதாகத் தெரிவிக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது.

இஸ்லாமியர் திருமணங்கள் பெரும்பாலும் மசூதியில்தான் மிகவும் எளிமையாகவும், அனைவரும் அறியும் வகையிலும் நடைபெறும். சாதாரண காலத்தில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு திருமணங்கள் நடக்கும். இப்போதோ ஒரே நாளில் எட்டு முதல் பத்து திருமணங்கள் வரைகூட நடக்கின்றன. மசூதிகளில் மட்டுமல்லாது வீடுகளிலும் நடைபெறுகின்றன. அது மட்டுமல்லாமல் மசூதிகளில் காலை வேளைகளில் மட்டும்தான் திருமணம் (நிக்கா) நடைபெறும். இப்போது மாலையிலும் கூட நடைபெறுகின்றன. எங்களுடைய அனுபவத்தில் இப்படி இத்தனை திருமணங்களை நாங்கள் நடத்தியதும் இல்லை, பார்த்ததும் இல்லை என்று காஜிமார்கள் தெரிவிக்கின்றனர். திருமணம் முடிந்ததற்கான சான்றிதழ் வக்ஃப் வாரியத்தால் வழங்கப்படுகிறது. இப்போது இந்த நடைமுறையையும் விரைந்து செய்து தருவதாக பலர் முன்வந்து, அதற்குப் பணமும் பெறுகின்றனர்.

மசோதா கொண்டுவரப்பட்டாலும் அது இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆன பொறுக்குக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் குழு விரைந்து முடிவெடுக்க முடியாது. இதில் தொடர்புள்ள அனைத்து மதத்தவரையும் அனைத்துத் தரப்பினரையும் அழைத்து ஆலோசனை கலந்து கருத்தொற்றுமை காணவே குழு விரும்பும். எனவே குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும். எனவே அவசரப்பட வேண்டாம் என்று இஸ்லாமிய சமூகத்துப் பெரியவர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கின்றனர். தெலங்கானா வக்ஃப் வாரியத் தலைவர் முகம்மது சலீம், மாநிலத்தின் அனைத்து காஜிமார்களையும் தொடர்புகொண்டு, இதை விளக்கி வருகிறார். அவர் மாநில ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதியிலும் முக்கியத் தலைவராக இருக்கிறார். இந்த மசோதாவை தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பது நிச்சயம் எனவே இதை ஆளும் கூட்டணியால் நிறைவேற்றிவிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

வெவ்வேறு முஸ்லிம் சமூக-மத அமைப்புகளின் உச்ச கூட்டமைப்பான ஐக்கிய முஸ்லிம் பேரவையும், முஸ்லிம் சமூகத்தவர் அவசரப்பட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது முஸ்லிம்களின் தனிச் சட்ட உரிமைகளிலும் தலையிடுவதால் இதை அவ்வளவு எளிதில் அரசால் நிறைவேற்றிவிட முடியாது என்றே முஸ்லிம் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இஸ்லாமிய மதநெறிப்படி இளம் பெண்கள் பூப்பெய்திய உடனேயே திருமணம் செய்துவிட வேண்டும். எனவே வயது தகுதியெல்லாம் செல்லுபடியாகாது என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் இதற்கு முன்னால் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தகுதி வயது 18 என்பது பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவதால் அடுத்து 21 என்பதும் கடைப்பிடிக்கப்பட்டுவிடுமோ என்று பலரும் அஞ்சுகின்றனர்.

மிகச் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் பெண்களில் பலர் உடல் அளவில் வலு குறைவாக இருப்பதால் பிறக்கும் குழந்தைகளும் வலுவின்றியும் குறைபாடுகளுடனும் பிறப்பதை சுகாதாரத் துறை சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் 18 வயதை எட்டியவுடனேயே பெண்களைத் திருமணம் செய்துகொள்வது அல்லது வரன் பார்ப்பது இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. மிகவும் ஏழைக் குடும்பங்களிலும் கல்வி-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களிலும் இப்படித் திருமணம் செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை 90 சதவீதமாக இருக்கிறது. இதனால் பொதுவாக அனைத்து மதங்களிலும் பெண்கள் கல்லூரிக் கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பெற முடியாமல் தடையாக இருக்கிறது என்று சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தச் சட்டத்தின் நோக்கம் சீர்திருத்தமல்ல, பொது சிவில் சட்டத்தை நோக்கிய அடுத்த அடி என்றே பாஜகவை எதிர்க்கும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமித்த குரலில் குற்றம்சாட்டுகின்றனர்.

"18 வயதாகிவிட்டால் வாக்களிக்கலாம்; அவரவருக்குச் சேர வேண்டிய சொத்துகளுக்கு நேரடியாகப் பொறுப்பேற்கலாம்; ஆனால் திருமணம் மட்டும் செய்துகொள்ளக் கூடாதா?" என்று கேட்கிறார்கள் இடதுசாரித் தலைவர்கள். படித்த, பொருளாதார வசதி படைத்த, முற்போக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் – எந்த மதமாக இருந்தாலும் - திருமணங்களுக்கு அவசரம் காட்டுவதில்லை என்பதும் உண்மை.

எல்லாவற்றையும் தாண்டி, சில சீர்திருத்தங்களை சமூகத்தின் முடிவுக்கே விடுவது நல்லது. எல்லாவற்றிலும் அரசு தலையிடுவது விபரீதமாகத்தான் முடியும் என்றே பரவலான கருத்து நிலவுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE