பொட்டாசியம் உரத்தின் விலையை குறைக்குமா மத்திய அரசு; விவசாயிகள் எதிர்பார்ப்பு

By கி.பார்த்திபன்

பழைய விலையை விட 70 சதவீத அளவுக்கு உயர்ந்திருக்கும் பொட்டாசியம் உரத்தின் விலையை, மத்திய அரசு குறைக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

நாட்டின் முதுகெலும்பாக விளங்குவது விவசாயம். ஆனால் பருவ காலநிலை மாற்றத்தால் காலம் தவறிப் பெய்யும் மழை, வறட்சி, விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் உள்ள இடர்ப்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயம் மட்டுமின்றி, அதை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகளின் நிலையும் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருவது வேதனையாக உள்ளது.

இச்சூழலில் விவசாயத்துக்கு முதுகெலும்பாக உள்ள பொட்டாசியம் உரத்தின் விலையை, அதன் பழைய விலையைக் காட்டிலும் 70 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு உயர்த்தியிருப்பது விவசாயிகளின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது. 50 கிலோ எடை கொண்ட பொட்டாசியம் உரம், கடந்த ஒரு வாரத்துக்கு முன்புவரை ரூ.1,015 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலையை ரூ.1,700 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கரும்பு விவசாயியும், உழவர் உழைப்பாளி கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளருமான ஓ.பி. குப்புதுரை கூறியதாவது: “மனிதனுக்கு இனிப்பு, புளிப்பு, காரம் ஆகிய 3 சுவைகளும் அவசியம். அதுபோல் பயிர்களுக்கு தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகிய மூன்றும் அவசியம். இதில் சாம்பல் சத்து பொட்டாசியம் உரம் மூலம் கிடைக்கிறது. வாழை, கரும்பு, மரவள்ளி, நெல் மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு பொட்டாசியம் உரம் மிக அவசியமான ஒன்றாகும்.

மரவள்ளி சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 200 கிலோ பொட்டாசியம் உரம் தேவைப்படும். இதுபோல் வாழை, கரும்பு, நெல்லுக்கும் கணிசமான அளவில் பொட்டாசியம் உரம் தேவைப்படும்.

இந்நிலையில் பொட்டாசியம் உரத்தின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளதால், விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். எனவே, உரம் விலை உயர்வை மத்திய அரசுதான் குறைக்க முடியும். உர மூட்டை மீது உரத்தின் விலை, மானியம் எவ்வளவு வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், தற்போது உர மூட்டையின் மீது உரத்தின் விலை மட்டுமே உள்ளது. இந்த விலையைக் குறைக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கே. முருகன் கூறும்போது, “பொட்டாசியம் உரத்துக்கான மூலப்பொருட்கள் இந்தியாவில் போதிய அளவு இல்லை. எனவே வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றது. அதனால் பொட்டாசியம் உரத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. உரத்தின் விலையைக் குறைப்பது தொடர்பாக, அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசும் விலையை குறைப்பதற்கு உண்டான நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது உரத்துக்கு வழங்கும் மானியத்தை மேலும் அதிகப்படுத்தும் திட்டமும் உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE