காஷ்மீரில் 4 முன்னாள் முதல்வர்களுக்கு எஸ்எஸ்ஜி பாதுகாப்பு ரத்து!

By காமதேனு

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அவரது மகனும் அக்கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகிய நால்வரும் ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்துடன் இருந்தபோது, வெவ்வேறு காலகட்டத்தில் முதல்வர் பொறுப்பு வகித்தவர்கள்.

இந்நிலையில், இவர்கள் 4 பேருக்கும் அளிக்கப்பட்டிருந்த சிறப்புப் பாதுகாப்புக் குழு (எஸ்எஸ்ஜி) பாதுகாப்பை ரத்துசெய்திருக்கிறது மத்திய அரசு. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த மதிப்பாய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக காஷ்மீரில் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் ஆகியோரைப் பாதுகாப்பும் பொறுப்பு எஸ்எஸ்ஜி படைக்கு வழங்கப்படும். இது அந்தப் பணிக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் பிரிவு ஆகும்.

இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் எஸ்எஸ்ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டிருப்பதை உமர் அப்துல்லா விமர்சித்திருக்கிறார்.

“இது நிச்சயமாக அரசியல் ரீதியிலான முடிவுதான். எங்கள் அரசியல் செயல்பாடுகள் அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கான எதிர்வினையும்கூட” என்று கூறியிருக்கும் அவர், “முன்னாள் முதல்வர்கள் அனைவரும், அதிகமாகக் குரல் எழுப்பிவருகிறோம். அரசையும் விமர்சித்துவருகிறோம். இந்நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் தருணம் முக்கியமானது. எனினும், இவை எதுவும் எங்களை மவுனமாக்கிவிடாது. இதுகுறித்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கும் பண்புகூட யாரிடமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா

பாதுகாப்பு விலக்கப்பட்டிருப்பது குறித்த தகவல் தனக்கும் முறைப்படி தெரிவிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கும் மெஹ்பூபா முஃப்தி, “ஏன் இப்படிச் செய்கிறார்கள் என என்னால் சொல்ல முடியவில்லை. நாம் என்ன மாதிரியான சூழலில் வாழ்கிறோம் என உங்களுக்குத் தெரியும். பஞ்சாபில் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பு நிறுத்தப்பட்ட செய்தி எப்படியெல்லாம் பிரபலப்படுத்தப்பட்டது. காஷ்மீரிலோ அவர்கள் எங்கள் பாதுகாப்பை விலக்கிக்கொள்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பாதுகாப்பு வகைப்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இனி காஷ்மீரின் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு இந்த நால்வருக்கும் கிடைக்கும். ஃபரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு ஏற்கெனவே தேசியப் பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) பாதுகாப்பு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE