நீட் விலக்கு: நாடு தழுவிய போராட்டம்; கி.வீரமணி அறிக்கை

By காமதேனு

நீட் தொடர்பாக தமிழக எம்பிக்களைச் சந்திக்க மறுக்கும் உள்துறை அமைச்சர் ஒருபக்கம்; தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’டுக்கு விலக்குக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், காலவரையறையின்றி நிறுத்திவைத்திருக்கும் தமிழக ஆளுநர் இன்னொரு பக்கம் இருக்கிறார்கள். இவர்களின் ஜனநாயக மாண்புக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் விரோதமான நடவடிக்கைகளைக் கண்டித்தும், எதிர்த்தும் ஒத்த கருத்துள்ளோரை ஒருங்கிணைத்து நாடு தழுவிய அளவில் இயக்கம் நடத்துவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், ‘மருத்துவப் படிப்புக்கான தேர்வை ஒன்றிய அரசே கையிலெடுத்துக்கொண்டதும், ஆண்டுதோறும் குளறுபடிகளுக்கு பஞ்சமில்லாததாகவும் கடந்த 3 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்று வருவதை தமிழக அரசு ஏற்கவில்லை; இதன் காரணமாக, இதுவரை 18-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட அவலமும் ஏற்பட்டிருக்கின்றது.

மாநில அரசின் கருத்துக்கும், கொள்கைக்கும் முரணாக ஒன்றிய அரசு திணிப்பதை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் இரண்டுமுறை தனிச் சட்டங்கள் ஒருமனதாக நிறைவேற்றியதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்பெற காத்திருக்க வேண்டியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்டங்களை குடியரசுத் தலைவருக்கு சட்டப்படி அனுப்பவேண்டிய கட்டாயம் உள்ள தமிழக ஆளுநர், கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆளுநரை இதற்காகவே சந்தித்தும் இன்றுவரை பலனின்றியே இருக்கிறது. இதற்காக தமிழகத்தின் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல கட்சிகளைச் சார்ந்தவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்திக்க முற்பட்ட போது, அவர்களைச் சந்திக்காமல், செயலாளர்மூலமே அந்த மனுவைப் பெற்றுள்ளார் குடியரசுத் தலைவர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நேரம் கேட்டபோது, நேரம் தராமல் இழுத்தடித்ததோடு, இறுதியில் சந்திக்க மறுத்துள்ள செய்தி, ஜனநாயக அரசின் மாண்புக்கும், மதிப்புக்கும் உகந்ததா? திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற குழுவினரைச் சந்திக்க மறுத்தது வன்மையான கண்டனத்திற்குரியது.

பொதுவாக தமிழ்நாட்டு மக்களைப் பாதிக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையில் அவர்களைச் சந்தித்து, அவர்களது கருத்துகளை சிறிது நேரம் காது கொடுத்து கேட்கக்கூட மறுப்பது ஒரு ஜனநாயக அரசில் நியாயந்தானா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல லட்சம் மக்களின் பிரதிநிதிகள் என்ற உண்மையைக்கூட, உள்துறை அமைச்சருக்குப் பிறர் சொல்லிக் கொடுத்தால்தான் தெரியுமா? அதிகார ஆணவம் கொண்ட பல முந்தைய ஆட்சிகளில் இதுபோல் நடந்துகொண்டவர்கள் பலர், வரலாற்றில் பெற்ற இடம் குப்பைத் தொட்டிதான்.

தமிழ்நாடு ஆளுநர், நீட்டுக்கு எதிரான சட்டப்பேரவை மசோதாவைத் தேவையின்றி காலதாமதம் செய்கிறார். இது சம்பந்தமாக ஒத்தக் கருத்துள்ள அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து வன்மையான கண்டனங்களைத் தெரிவிப்போம். கரோனா கொடுந்தொற்றின் 3-வது அலை காரணமாக நமது வேக நடவடிக்கைகள் சற்று மெல்ல, ஆனால் உறுதியாக இருக்கவேண்டியுள்ளது.

இப்படி குறுக்குசால் ஓட்டிக்கொண்டே நீட் தேர்வுக்கு விலக்குப்பெற முடிந்ததா என்று கேட்பது, எவ்வளவு இரட்டை நிலைப்பாடு - பொருந்தாக் கூற்று என்பதை நாடு தழுவிய பிரச்சாரத்தின்மூலம் புரிய வைப்போம்’ என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE