இந்தியாவில் ஒரேநாளில் 55.4% அதிகரித்த கரோனா!

By காமதேனு

இந்தியாவில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒருபுறம் துரிதகதியில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் நிலையில், மறுபுறம் கோவிட் 19 தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

நேற்று 37,379 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது நேற்றைய எண்ணிக்கையைவிட 55.4 சதவீதம் அதிகம்.

ஒமைக்ரான் தொற்றுகளின் எண்ணிக்கை 2,135 ஆக உயர்ந்திருக்கிறது. மகாராஷ்டிரத்தில் 653 பேர், டெல்லியில் 464 பேர் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

கரோனா தொற்றிலிருந்து குணமாகின்றவர்களின் விகிதம் 98.01 ஆக இருப்பதுதான் இதில் ஆறுதல் தரும் விஷயம். கடந்த 24 மணி நேரத்தில் 15,389 பேர் தொற்றிலிருந்து குணமடைந்திருக்கின்றனர். மொத்தம் 3,43,21,803 பேர் கரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருக்கின்றனர்.

அதிவேகமாகப் பரவக்கூடிய ஒமைக்ரான் திரிபின் காரணமாக, உலகம் முழுதும் கரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE