வங்கதேச உருவாக்கத்தில் பங்களித்த கடற்படை அதிகாரி எஸ்.எச்.சர்மா மரணம்

By காமதேனு

1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் தீரத்துடன் பங்கேற்ற கடற்படை துணை அட்மிரல் எஸ்.எச்.சர்மா நேற்று (ஜன.3) காலமானார். கிழக்குக் கடற்படையின் ஃப்ளாக் ஆஃபீஸராகப் பொறுப்பு வகித்தவர். அந்தப் போரில் பாகிஸ்தானை வென்று வங்கதேசத்தை உருவாக்கித் தந்தது இந்தியா.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை 6.20 மணி அளவில் துணை அட்மிரல் எஸ்.எச்.சர்மா காலமானார். அவரது உடல், இன்று அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்றும், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். ஜனவரி 5-ல் அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

அவரது மறைவுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அஞ்சலி தெரிவித்திருக்கிறார். “ஒடிசாவின் புகழ்பெற்ற புதல்வர்களில் ஒருவரான துணை அட்மிரல் எஸ்.எச்.சர்மா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயர் அடைந்திருக்கிறேன். இந்தியா புரிந்த பல யுத்தங்களில் முன்னணியில் நின்று போரிட்ட வீரர் அவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரின் துயரத்தில் பங்கேற்கிறேன்” என ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் நவீன் பட்நாயக் கூறியிருக்கிறார்.

புவனேஸ்வரில் உள்ள 120 பட்டாலியன் ராணுவத்தின் நிலைய அதிகரி கேப்டன் சஞ்சீவ் வர்மா, “துணை அட்மிரல் எஸ்.எச்.சர்மா எப்போதும் எங்களுக்கு ஊக்கம் தருபவராக இருந்தார். கிழக்குக் கடற்படையின் ஃப்ளாக் ஆஃபீஸராக, வங்காள விரிகுடாவில் நடந்த யுத்தத்தில் இந்தியாவின் வெற்றிக்கு வியூகம் வகுத்த அவரது பங்களிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

1922 டிசம்பர் 1-ல், அப்போது ‘பிஹார் மற்றும் ஒடிசா மாகாண’த்தில், பிறந்தவர் எஸ்.எச்.சர்மா. குடும்பத்தின் 9 குழந்தைகளில் மூத்தவர் அவர்தான். அவரது தந்தை நரசிங்க பாண்டா, அம்மாகாணத்தின் துணைப் பதிவாளராகப் பணிபுரிந்தவர். செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்த எஸ்.எச்.சர்மா தனது 11 வயதுவரை, குழந்தைப்பேறு இல்லாத உறவினரின் வீட்டில் வளர்க்கப்பட்டவர்.

கல்வியிலும் வீரத்திலும் சிறந்த விளங்கிய அவர், பிரிட்டிஷ் இந்தியாவின் கடற்படையில் இணைந்தார். இரண்டாம் உலகப்போரிலும் பங்கேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், கப்பல் செலுத்தும் பயிற்சிக்காக ராயல் நேவி பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர், தனது திறமை மூலம் படிப்படியாக முன்னேறி, துணை அட்மிரலாக உயர்ந்தார்.

எஸ்.எச்.சர்மா, ‘மை இயர்ஸ் அட் ஸீ’ எனும் பெயரில் 2017-ல் தன்வரலாற்றுப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில், பாகிஸ்தான் கடற்படையைத் தோற்கடித்த விதம், இந்தியக் கடற்படையின் வளர்ச்சி போன்ற பல விஷயங்களைப் பதிவுசெய்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE