பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: பகுதி பொதுமுடக்கத்துக்கு ஆளாகும் மேற்கு வங்கம்

By காமதேனு

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை, 50 சதவீதத்தாரோடு அலுவலகம் மற்றும் பொதுப்போக்குவரத்து என, கரோனாவுக்கு எதிரான போரில் பகுதி பொதுமுடக்கத்துக்கு ஆளாகி இருக்கிறது மேற்கு வங்க மாநிலம்.

கரோனாப் பரவலுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகளை நாளை(ஜன.3) முதல் அமல்படுத்துகிறது மேற்கு வங்கம்.

பள்ளி, கல்லூரிகள் மட்டுமன்றி, ஸ்பா, சலூன், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு தலங்கள் ஆகியவை மூடப்படுகின்றன. வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்கவும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணிபுரியவும், அனைத்து வகை அலுவல் சார்ந்த சந்திப்புகளையும் ஆன்லைனில் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலை 7 மணி வரை 50 சதவீத பயணிகளுடன் ரயில்கள் இயங்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கபட்ட நாடுகளுடனான வான்போக்குவரத்தில் கட்டுப்பாடு விதிப்பதுபோல, உள்நாட்டில் அதிகம் கரோனா பாதிப்புள்ள நகரங்களுடனான விமானப் போக்குவரத்தையும் மே.வங்கம் கட்டுப்படுத்த முடிவு செய்திருக்கிறது. இதன்படி டெல்லி மற்றும் மும்பைக்கான விமான சேவைகளை, திங்கள் மற்றும் வெள்ளி என வாரத்தில் இருமுறை மட்டுமே செயல்படுத்த முடிவு செய்துள்ளது. சுப காரியங்களில் 50, அசுப காரியங்களில் 20 என கூடும் நபர்களின் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

மேற்கு வங்கம் போலவே நாட்டின் பல்வேறு மாநிலங்களும், கடந்தாண்டு கரோனா இரண்டாம் அலை காலத்தின் கட்டுப்பாடுகளுக்கு திரும்பி வருகின்றன. பொதுமக்கள் இவற்றை எல்லாம் அலட்சியப்படுத்தாது, பொறுப்புணர்வோடு நடந்துகொண்டால் மட்டுமே, அடுத்து வர வாய்ப்புள்ள பெருந்தொற்று அலையிலிருந்து நம்மில் பலரை காப்பாற்ற முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE