ஏடிஎம் கட்டண உயர்வை ரத்து செய்யுங்க சார்..

By கரு.முத்து

ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதில் புதிய கட்டண உயர்வு, ஜன.1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ள நபர்கள் அதே வங்கியின் ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் மட்டுமே கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதற்குமேல் பணம் எடுத்தால், இதுவரை இருந்துவந்த 20 ரூபாய்க்கு பதிலாக 21 ரூபாய் வசூலிக்கப்படும் என்ற நடைமுறையை ரிசர்வ் வங்கி செயல்படுத்தியுள்ளது.

இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாடெங்கும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. மயிலாடுதுறையை சேர்ந்த சமூக ஆர்வலரான அப்பர் சுந்தரம் என்பவர், ஏடிஎம் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

இதுகுறித்து அவரிடம் பேசினேன்.

"ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள, ஏடிஎம் பயன்பாட்டில் கூடுதல் கட்டணங்களுடனான, புதிய வழிமுறைகள் புத்தாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. நாட்டு மக்களுக்கு புத்தாண்டு துவக்கத்திலேயே இப்படி ஒரு சுமையை ரிசர்வ் வங்கி பரிசளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பல வங்கி ஏடிஎம்களில் தற்போது வரை ஒரு நேரத்தில் பத்தாயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்னும் நிலைதான் உள்ளது. இன்னும் சில வங்கிகளில் ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வரை மட்டும்தான் எடுக்க முடிகிறது. இப்படி இருக்கையில் வங்கி வாடிக்கையாளர் ஒருவர், மாதத்தில் பலமுறை ஏடிஎம்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்படி செல்லும்போது ஒவ்வொரு முறையும் கட்டணம் வசூலிப்பதால் வாடிக்கையாளர் பணம் வங்கியால் அடிக்கடி சுரண்டப்படுகிறது.

அப்பர் சுந்தரம்

வங்கிகளில் திரளும் கூட்டத்தை குறைப்பது மற்றும் வாடிக்கையாளர் கையாளும் பணத்துக்கு பாதுகாப்பு உள்ளிட்ட நோக்கங்களுடனே ஏடிஎம்கள் திறக்கப்பட்டன. ஆனால் அதற்கும் இவ்வளவு கட்டணம் என்றால், மீண்டும் வங்கிகளுக்கே நேரில் படையெடுக்க வேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்படும். வங்கிச் செயல்பாடுகள் என்பவை வாடிக்கையாளர் நிதிப் பரிவர்த்தனைக்கான மக்கள் சேவை என்பதை மறந்து, தொட்டதற்கு எல்லாம் கட்டணம் விதிப்பதும், பணத்தை எடுப்பதும் வழிப்பறிக்குச் சமமாகும்.

மக்கள் சேமித்து வரும் வைப்புத் தொகையை வைத்தே பல வழிகளில், கடன் கொடுத்து லாபம் ஈட்டுகின்ற வங்கிகள் இவ்வாறு ஏடிஎம் பயன்பாட்டிற்கும் கட்டணம் பெறுவது கடும் கண்டனத்துக்கு உரியது. சாமானியனின் உழைப்பில் உருவான பணத்தை, இப்படி மறைமுகமாக கையகப்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும்.

அதன்பொருட்டு உடனடியாக ஏடிஎம் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் பணம் செலுத்துவதற்கான வசதிகளையும் வங்கிகள் அதிகப்படுத்த வேண்டும். எப்படி அனைத்து வங்கி ஏடிஎம்களையும் பயன்படுத்தி பணம் எடுக்கிறோமோ அதே பாணியில், டெபாசிட் செய்வதற்கும் அனைத்து வங்கி ஏடிஎம்களையும் ஏற்புடையதாக மாற்ற வேண்டும்.

கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்ற வழிகளில், கைப்பேசி மூலமாகவும் செலவழிக்க வாய்ப்பு உள்ளதைப்போல, சேமிப்பதற்கும் ஏற்பாடுகள் அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் வழிப்பறி அபாயங்களில் இருந்தும் தப்பிக்க முடியும்.

நடைமுறையிலுள்ள மக்களின் கஷ்டங்களை உணர்ந்து, காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை செய்ய ரிசர்வ் வங்கி முன்வரவேண்டும். இவற்றையெல்லாம் வலியுறுத்தியே ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்" என்று முடித்தார் அப்பர்சுந்தரம்.

சாமானியனின் இந்த குரலுக்கு செவிமடுப்பாரா சக்திகாந்த தாஸ்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE