இண்டியா கூட்டணியின் வெற்றி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம்: கோவை முப்பெரும் விழாவுக்கு ஸ்டாலின் அழைப்பு

By KU BUREAU

சென்னை: கோவை முப்பெரும் விழாவில் பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள முதல்வர்மு.க.ஸ்டாலின், 40-க்கு 40 உள்ளிட்ட இண்டியா கூட்டணியின்வெற்றியானது, மத்தியில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம் என்று தெரிவித்துள்ளார்.

நாற்பதுக்கு நாற்பது வெற்றியையும், கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையும், வெற்றிக் கூட்டணிக்குத் தலைமையேற்ற உங்களில் ஒருவனான எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என ஜூன் 8-ம் தேதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஜூன்15 அன்று கோவையில் முப்பெரும்விழா நடைபெறும் என அறிவித்திருக்கிறார். இது கட்சியின் உடன்பிறப்புகளின் உழைப்பைப் பாராட்டுகின்ற விழா. ஓரு லட்சியக் கூட்டணியின் முழுமையான வெற்றிக்குத் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்சித் தலைவர்களும், அதன் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆற்றிய பணிகள் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாதபோது நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழகத்துக்கு என்ன லாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல. அவர்களின் தோல்வி புலம்பல். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும். தமிழகத்தின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம்.

கோவையில் நம் தோழமைக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழா என்பது மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது.

மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என்பது போல நினைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து அரசியல் லாபம் தேடிய கட்சிகளின் உண்மையான நிலை என்ன என்பதை திமுகவுக்கும், அதன் கூட்டணிக்கும் அளித்துள்ள வெற்றியின் மூலமாகமேற்கு மண்டல மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.

கோவை முப்பெரும் விழாவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலிலும் வெற்றியை உறுதி செய்தாக வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்துக்கும் நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும்.

வரும் 2026 சட்டபேரவை தேர்தலில் 200-க்கும் கூடுதலான தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும். காணப் போகும் களங்கள் அனைத்திலும் திமுகவெல்லட்டும். கோவை குலுங்கிட கொள்கைத் தீரர்களே திரண்டிடுக. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE