இன்று முதல் சிறாருக்கான தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்

By காமதேனு

நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு, இன்று தொடங்கியது.

‘ஜனவரி 3 முதல் 15 - 18 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும்பணி தொடங்கப்படும்’ என்று, ஏற்கெனவே பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள சிறாருக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களிடம் கோவாக்சின் தடுப்பூசி ஆய்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சிறார்களுக்கு ரத்தம் உறைதல், வீக்கம் உள்ளிட்ட எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. அதன்படி 2, 3-ம் கட்ட ஆய்வுகளின் முடிவில், சிறாருக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது உறுதியாகியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜன.3 முதல் தொடங்க உள்ளன.

இதற்கான முன்பதிவு இன்று(ஜன.1) முதல் தொடங்கியுள்ளது. மாணவ, மாணவியர் கோவின் (Cowin) இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள முடியும். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய சிறார், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையுடன் பள்ளி அடையாள அட்டையைப் பயன்படுத்தியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி ஜன.10 முதல் தொடங்கும் எனவும், இணை நோயுள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையைப் பெற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE